×

ராகு கேது எதைக் குறிக்கிறது?

?ஒரு பெண்ணை நான் உயிருக்குயிராக நேசிக்கிறேன். அவளுக்காக நான் எதையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஏன் இதையும் புனிதமாகக் கருதக் கூடாது?
– டி.எஸ்.சங்கரன், மேட்டூர் அணை.

கடவுளிடம் நாம் செலுத்தும் பக்திக்கும் பிரேமை என்று ஒரு பெயர் உண்டு. ஆனால் உலகியலில் நாம் பிரேமை என்பதை, காதலர்கள் ஒருவர்மீது மற்றவர் வைக்கும் ஆசைக்கு உபயோகிக்கிறோம். ஆகையால், நாம் ஆண்டவனிடம் செலுத்துவதும், காதலியிடம் கொள்வதும் ஒரே மாதிரிதான் பிரேமைதான் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், இவை இரண்டும் அனுபவம், உணர்வு, கால எல்லை ஆகிய மூன்றிலும் முற்றிலும் வேறுபடுகின்றன. காதலியிடம் உண்டாகும் அன்பு உங்களைக் கட்டிப் போடுகிறது. ஆண்டவனிடம் செலுத்தும் பிரேமை உங்களை கட்டுகளிலிருந்து விடுகிறது. காதலில் கிடைக்கும் இன்பத்துக்கு உடல் தேவைப்படுகிறது. ஆண்டவனிடம் கிடைக்கும் இன்பம் உடலின் எல்லையைக் கடந்து நிற்கிறது. இளமை உள்ளவரைக்கும்தான் காதல் இன்பம் சுவை தரும். இளமையின் இச்சைகள் மறைந்த வயதில்தான் ஆண்டவனிடம் காட்டும் நேசம் உங்களுக்குச் சுவைக்கும். இருவருக்குள் ஏற்படும் காதல் தொடர்பு, அவர்கள் இருவருக்குள்ளேயே தேங்கும் குட்டை நீரைப்போல இருக்கும். ஆண்டவனிடம் காட்டும் பக்தியால் ஏற்படும் தொடர்பு நாடு முழுவதும் விரிந்து, எல்லா உள்ளங்களிலும் நதியில் பிரவாகத்தைப் போலத் தூய்மை ஏற்படுத்தும். ரோஜா பூக்கும்போது, கூடவே முள்ளும் வளர்கிறது. மனித உள்ளத்தில் பிரேமை பக்தியாகவும் மலரும்; காமமாகவும் வளரும். பக்தியாகிய மலரை, காமமாகிய முள் தீண்டாமல் பெறுவதே மனிதன் உய்வடைய வழிகாட்டும்.

?பலர் திரும்பத் திரும்ப ‘ஸ்ரீ ராமஜெயம்’ என்று எழுதுகிறார்களே? அதனால் என்ன பலன் கிடைக்க முடியும்?
– எஸ். நாராயணி, பாலக்காடு.

‘கடவுளை நேசி! அவரை எப்படி நீ நேசித்தாலும் பரவாயில்லை!’ என்று பகவத்கீதை சொல்கிறது. ஒரு தொண்டர் பயபக்தியுடன் ஒரு பெரிய புத்தகத்தைக் கொண்டு வந்து வணங்கி நின்றார். அந்தப் புத்தகம் முழுவதும் வரிசை வரிசையாக, ‘ஓம் ராமா’ என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வளவு தடவைகள் எழுதியபோதும் அவர் ராமனை எண்ணி மானசீகமாக வணங்கி இருப்பார் அல்லவா? சைதன்ய தேவர் தக்காணத்தில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் மரத்தடியில் ஒரு பண்டிதர் உட்கார்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர் முன் அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒரு வயதான கிழவி உட்கார்ந்து கண்களை மூடியவண்ணம், கன்னங்களில் நீர் பெருகக் கேட்டுக் கொண்டிருந்தார். சைதன்யர் அவளிடம், ‘‘அம்மா! நீ ஏன் கண்ணீர் விடுகிறாய்?’’ என்று கேட்டார். அதற்கு அந்தக் கிழவி, ‘‘சுவாமி! நான் படிப்பறிவு இல்லாதவள். எனக்கு ஒரு விளக்கமும் புரியவில்லை. இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டால் எனக்குப் பார்த்த சாரதியாகக் கிருஷ்ண பகவான் மனத்தில் தோன்றுகிறார். அவர், பார்த்தனுக்கு உபதேசம் செய்வது எனக்கு ஆசீர்வாதம் செய்வது போலத் தோன்றுகிறது. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்னையறியாமல் கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது….’’ என்றாள்.

?நடராஜர், குழலூதும் கண்ணன் படம், சிலைகளை வீட்டில் வழிபடக் கூடாது என்கிறார்களே, செல்வம் போய் விடுமாமே?
– சத்தியநாராயணன், சென்னை.

சில விஷயங்கள் யாரோ ஒருவர் சொல்லி அதை மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ காலம் காலமாக பின்பற்றி வருவதாகவே இருக்கின்றன. குழலூதும் கண்ணன் படம் இருந்தால் எல்லாச் செல்வங்களும் வெளியே போய்விடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை எனக்குத் தெரிந்து பல செல்வந்தர்கள் வீடுகளில் நடராஜர் மூர்த்தியின் படத்தையும் குழலூதும் கண்ணன் படத்தையும் பார்த்திருக்கின்றேன். இது நம்முடைய மனதைப் பொறுத்தது. பகவான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர் அருள் செய்யவே செய்வார். நம்முடைய இஷ்ட மூர்த்தி எப்படி இருந்தால் நமக்கு மன மகிழ்ச்சியைத் தருமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

?ராகு கேது எதைக் குறிக்கிறது?
– திவ்யா, திருக்கோவிலூர்.

ராகு பிரம்மாண்டத்தைக் குறிக்கிறது. பெரிய சிந்தனைகளைக் குறிக்கிறது. திட்டங்களைக் குறிக்கிறது. தற்காப்பைக் குறிக்கிறது. தைரியத்தோடு எதிர்ப்பதைக் குறிக்கிறது. வெற்றியைக் குறிக்கிறது. கேது ஞானத்தைக் குறிக்கிறது. அடக்கத்தைக் குறிக்கிறது. ரகசியங்களைக் குறிக்கிறது.

ராகு – கேது கண்ணுக்குத் தெரியாத புள்ளிகள் (Nodes). உள் இயக்கங்கள். ஆனால், மற்ற கிரகங்களைக் கட்டுப்படுத்தும் இயக்கங்கள். இதைப் புரிந்து கொண்டால், உலகியல் வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும், மிகப்பெரிய சாதனைகளைப் புரியலாம்.

?வீட்டில் சரம ஸ்லோகம் படிக்கலாமா?
– பரத், கேரளா.

நீங்கள் எந்த சரம ஸ்லோகத்தைக் குறித்து கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொதுவாகவே லௌகீகமான சரம ஸ்லோகங்கள் உண்டு. ஒருவர் இறந்து விட்டால் அவருடைய கரும காரிய பத்திரிக்கையில் அச்சிடுவதற்காக எழுதுவார்கள். இது சாதாரணமான சரம ஸ்லோகம். ஆனால் வைணவத்தில் சரம ஸ்லோகம் என்று மூன்று விஷயங்கள் உண்டு. ஒன்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம். இன்னொன்று ராமன் விபீஷ்ணனிடத்திலே சொன்ன சரம ஸ்லோகம். மூன்றாவது வராகப் பெருமாள் சொன்ன சரமஸ்லோகம். இந்தச் சரம ஸ்லோகங்களை தினசரி பூஜை அறையில் சொல்ல வேண்டும். வைணவர்கள் திருமண் இட்டுக் கொள்ளும் போதும், பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுதும் இந்த மூன்று சரம ஸ்லோகத்தையும் சொல்லாமல் பூஜையை முடிக்க மாட்டார்கள். சரம ஸ்லோகம் என்பது ‘‘இதைவிட மேலான ஒரு ஸ்லோகம் இல்லை’’ என்பது. எல்லாச் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் விட இந்த சரம ஸ்லோகம் உயர்ந்தது என்பதால் தினசரி அவசியம் சொல்ல வேண்டும்.

?பணத்தின் பலத்தை எதிர்த்து நிற்க யாரால் முடியும்? எனவே தானே எல்லோரும் பணம் பணம் என்று பறக்கிறார்கள்?
– விமல், மதுரை.

பொதுவாக இந்தக் காலத்தில் பணம் தான் பலமாக இருக்கிறது. பணத்தைத்தான் பலமாக நினைக்கவும் செய்கிறார்கள். ஆனால் அது உண் மையான பலம் அல்ல. அதில் ஊடுறுவிய ஒரு அச்சம் இருக்கும். ஆனால், உண்மையான சாது சன்யாசிகளால் பணத்தின் கவர்ச்சியையும் பலத்தையும் எதிர்த்திருக்க முடியும். அப்படி நின்றும் இருக்கிறார்கள். நாடாளும் மன்னன் ஒரு துறவியிடம் கேட்டான்.
‘‘உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள் தருகிறேன்’’.
துறவி சிரித்துக் கொண்டே கேட்டார்.
‘‘உனக்கு என்ன வேண்டும்? எதற்காக வந்திருக்கிறாய்?’’
பணத்தின் பலம் தோற்ற இடம் இதுதான்.

?வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று சொல்கிறார்களே? வாழ்த்துவதற்கு வயது முக்கியமா?
– சந்தோஷ்குமார், சென்னை.

வாழ்த்துவதற்கு வயது முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் மனதுதான். அதிலும் வைணவ மரபு மனதார வாழ்த்துங்கள் என்று கூறுகிறது. அதனால் தான் பெரியவர்களுக்கு கூட இளையவர்கள் பல்லாண்டு பாடும் வழக்கம் உண்டு. மணிவாசகர் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்று வாழ்த்துகிறார். மணிவாசகரை விட பெரியவன் அல்லவா இறைவன். பெரியாழ்வார் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுகிறார். எனவே மனம் நிறைய வாழ்த்துங்கள். வாழ்த்து பெறுங்கள்.

Tags : Raku Ketu ,D. S. Sankaran ,Mattur Dam ,God ,
× RELATED சென்னையில் ஓர் உடுப்பி கிருஷ்ணர்!