×

குகைக்குள் மகான்!

1448-1460 காலத்தில் வாழ்ந்த வியாசராஜர் பரம்பரையில் வந்த “ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரை’’ பற்றிய பல அதிசய மிக்க சரித்திர தொகுப்பை காணலாம்.

பூரி சேத்திரத்தில் புருஷோத்தமர்

மகான் ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர், “ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தரின்’’ சீடராவார். இவர், வியாசராஜ மடத்தின் மூன்றாவது பீடாதிபதியாவார். இவரது பூர்வாஷ்ரம திருநாமம் “ஸ்ரீ ஸ்ரீனிவாசாச்சாரியார் ஆகும். மகான் ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தர், தனது சஞ்சாரத்தை மேற்கொள்ளும் சமயத்தில், பாரதத்தின் கிழக்குப் பகுதிகளில், பங்களா மற்றும் கலிங்க தேசத்தில் அதாவது தற்போதுள்ள பூரி ஜெகந்நாத சேத்திரத்தில், ஸ்ரீ ஸ்ரீனிவாசாச்சாரியாரை கண்டெடுக்கிறார். ஸ்ரீனிவாசாச்சாரியார், தன் குருவான ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தரிடத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பாடங்களை கற்கிறார்.

அதன் விளைவாக, தானும் சந்நியாச தீக்ஷையை பெற விரும்பி, குரு ஸ்ரீ ஜெயத்வஜ தீர்த்தரிடத்தில் தனது விருப்பத்தை தெரிவிக்க, தன் பொறுப்புகளை கவனிக்க சரியான ஆள் இவர்தான் என்று தீர்மானித்து, ஸ்ரீனிவாசாச்சாரியாருக்கு சந்நியாசம் வழங்கி, அவருக்கு “ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர்’’ என்னும் திருநாமம் சூட்டினார். தனது குருவின் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர் தட்சிண (தெற்கு) தேசத்திற்குச் சென்று, துவைத தத்துவத்தை பரப்பினார்.

அழகான அப்ரமேயர்

கர்நாடக மாநிலம் சென்னபட்டணம் அருகில் உள்ள “தொட்டமலூர்’’ (Doddamalur) என்னும் இடத்தில், “ஸ்ரீராமபிரமேய சுவாமி கோயில்’’ பிரசித்தி பெற்றவை ஆகும். இக்கோயிலை, “ஸ்ரீ அப்ரமேய சுவாமி கோயில்’’ என்றும் அழைப்பதுண்டு. இந்த கோயிலின் பிரதான தெய்வம், “நவநீத கிருஷ்ணர்’’ ஆவார். மேலும், “ராமபிரமேய சுவாமி’’ என்று சொல்லக்கூடிய ராமபிரானும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலை, மகான் ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர், விஜயம் செய்து இரு தெய்வத்தின் அருளை பெறுகிறார். அதன் பிறகு தனது சஞ்சாரத்தை அடியோடு நிறுத்திக்கொண்டு, தொட்டமலூரிலேயே தங்கிவிடுகிறார். அன்றிலிருந்து, இந்த கோயிலின் வழிபாடுகளும், பக்தர்களின் எண்ணிக்கைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இந்த சேத்திரம், பண்டைய வேத காலங்களில் “ஞான மண்டபம்’’ என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், புரந்தரதாசர் போன்ற தவசீலர்கள், இக்கோயிலுக்கு வந்து தரிசித்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்ரமேய சுவாமி கோயிலின் கோபுரம், மிக அழகாக செம்மண் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு காணப்படுகிறது. கோபுரத்தின் நுழைவாயிலில், வனம் போல் மலர்கள் வளர்ந்து இருப்பது, நம் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. கோயிலுக்குள் சென்ற உடன், பழமை மாறாத அக்காலத்து கருங்கற்களால் ஆன கட்டிடங்களை பார்க்க முடிகிறது. இக்கோயிலின் சிற்பத்தின் நுணுக்கங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றது.

கண்வ முனிவர் வசித்த இடம்

மூலவரான ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஒரு குழந்தையை போல் தவழ்ந்தும், கையில் வெண்ணெயை வைத்தும், நம் அருகில் வருவது போல் காட்சியளிக்கிறார். மிகப் பெரிய கண்கள், நெற்றியில் திருமண் இட்டு நம் மனதை கொள்ளையடிக்கிறார். அதே போல் ஸ்ரீ ராமபிரமேய சுவாமியும், மிக அழகாக சுமார் ஆறடி உயரத்தில் அருள்கிறார். இங்கே, ஆஞ்சநேயர் சந்நதியும் இருக்கிறது. பெரிய கிரீடம் அணிந்து, கைகூப்பி, சாதுவான முகபாவத்தோடு அனுமன் பிரசித்தி ஆகியிருக்கிறார். கோயில் பிராகாரத்தில், வற்றிய நிலையில் ஒரு கிணறு காணப்படுகிறது. இதன் உள்ளே பக்தர்கள், காணிக்கையை செலுத்துகிறார்கள். கோயில் அருகில் மலூர் ஏறி காணப்படுகிறது. இத்திருக்கோயிலில், தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதே போல், கிருஷ்ண ஜெயந்தி அன்று விழா கோலம் பூண்டிருக்கும். மேலும், ஸ்ரீ ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களிலும், இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலை பற்றிய மேலும் பல தகவல்களை, பின் வரும் இதழ்களில் நாம் காணலாம். இப்போது மீண்டும் ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரை பற்றி பார்ப்போமா! மகான் ஸ்ரீ வியாசராஜர் எப்படி தேச சஞ்சாரம் மேற்கொள்ளும் சமயங்களில், ஆங்காங்கு அனுமனை பிரதிஷ்டை செய்திருந்தாரோ… அது போல், இவரும் தேச சஞ்சாரத்தை மேற்கொள்ளும் சமயத்தில், கர்நாடகம் முழுவதிலும் குறிப்பாக மலூர் பகுதியில், இவ்வூர் சொல்லாடலான “அப்பூர் தோடியின் கம்படா நரசிம்ம குடி’’ என்று சொல்லப்படும் நரசிம்மர் கோயிலை ஆங்காங்கு பிரதிஷ்டை செய்துள்ளதாக, செவி வழிச் செய்தி ஒன்றும் கூறப்படுகிறது.

அதுவும், எப்படி வியாசராஜர் ஆற்றங்கரையை ஒட்டி அனுமனை பிரதிஷ்டை செய்திருந்தாரோ… அதே போல், ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரும், எங்கு எல்லம் நதிக்கரை இருக்கிறதோ… அதன் ஓரத்தில், நரசிம்மரை பிரதிஷ்டை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விடம் முழுவதும் முன்னொரு காலத்தில், “கண்வ முனிவரால்’’ பராமரிக்கப்பட்டும், தவம் புரிந்தும் வந்திருக்கின்றார். மேலும், இந்த இடங்களில் இவரது ஆசிரமங்கள் ஏராளமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மலை மீதுள்ள குகை

ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர், பகவானை நினைத்து பிரதி தினமும் தவம் செய்வதிலும், நரசிம்மரிடத்தில் பக்தர்களுக்காக பிரார்த்தனை செய்வதிலும், மிக முக்கியமாக தனது சீடர்களுக்கு “சுதா மங்களம்’’ போன்ற மிகப் பெரிய துவைத தத்துவங்களை எடுத்துரைப்பதிலும், கவனம் செலுத்தத் தொடங்கினார். காலங்கள் உருண்டோட, புருஷோத்தம தீர்த்தரின் இத்தகைய செயல்பாட்டினால், கர்நாடகாவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும், மத்வரை அறிந்துகொண்டார்கள். தினமும் அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினர். அக்காலத்தில் ஒரு சந்நியாசி, பூஜைகளை முடித்துக் கொண்டு, `பிக்ஷை’ என்று சொல்லப்படும், வீடுவீடாக சென்று அரிசி போன்றவற்றை பெற்றுக் கொண்டு, சமையல் செய்து, பகவானுக்கு நிவேதித்து, தானும் உண்ண வேண்டும் என்பது நியதி. ஆனால், ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர், தினசரி வழிபாட்டினை முடித்துக் கொண்டு, தவம் செய்வதற்காக அருகிலுள்ள மலை குகைக்குச் சென்று, அங்கு நாள் முழுவதும் தவம் இருப்பாராம்.

சில சமயங்களில், இரவு நேரத்தில் குகைக்குள் செல்லும் புருஷோத்தம தீர்த்தர், மத்வரின் “பிரம்ம சூத்திர பாஷ்யத்தின்’’ உள்ளடக்கங்களைப் பற்றியும் தியானிப்பாராம். இப்படியாக, விடியவிடிய குகைக்குள்ளே இருந்து தியானித்துவிட்டு, மறுநாள் காலையில்தான் பூஜைகளை மேற்கொள்வதற்காக, கீழே இறங்குவாராம்.

ஹா.. ஹா… என்ன ஒரு மஹாதபஸ்வி!

இன்றும் இந்த மலை குகையை காணலாம். இந்த குகையை “புருஷோத்தம குஹா’’ (புருஷோத்தம குகை) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில், Shri Purushottama teertha Gavi என்று அழைக்கிறார்கள். மலை ஏற பிடி ஏதுமில்லை. குறுகிய படிகள். மிக கவனமாக ஏற வேண்டும். மலையை சுற்றிலும் காடுகள் என்பதால், மலையில் ஏதேனும் விஷஜந்துக்களோ அல்லது மிருகங்களே இருக்கலாம். ஆகையால், கூட்டாக மூன்று நான்கு நபர்கள் சேர்ந்து செல்வது நல்லது. குகைகளின் மீது ஏறி நின்று பார்த்தால், சுற்றிலும் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. மிக அழகாக காட்சியளிக்கின்றன.

காற்றில் மறைந்தார்

புருஷோத்தம தீர்த்தரை, “சாஸ்திர கோவிதா:’’ என்று சில மத்வ நூல்கள் குறிப்பிடுகின்றன. காரணம், துவைத சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தவராக இருந்தமையால், இவருக்கு அத்தகைய சிறப்புகளை கொடுக்கின்றன. மேலும், அக்காலத்தில் பல விவாதங்களில் கலந்துக் கொண்டு அதில் சிறந்து விளங்கினார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் தெற்கு சித்திரை வீதியில் உள்ள “ஸ்ரீ பாதராஜ மடம்’’ உள்ளது. இங்கு மூலபிருந்தாவனமாக “ஸ்ரீ ஸ்வர்ணவர்ண தீர்த்தர்’’ இருக்கிறார். இவரும், புருஷோத்தம தீர்த்தரும், சமகாலத்தவர்கள் என்று கூறுகிறார்கள்.

இப்படி பல சிறப்புகளை பெற்ற புருஷோத்தம தீர்த்தர், பகவான் நரசிம்மரின் மீது அலாதி பக்தி கொண்டமையால், அவரின் பெயரைக்கொண்ட நரசிம்மன் என்னும் தனது அன்பான சீடருக்கு “ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தர்’’ என்ற திருநாமம் சூட்டி, தான் கவனித்து வந்த பொறுப்புகளையும், பூஜை செய்து வந்த சாளக்கிராமங்கள் மற்றும் விக்ரகங்கள் ஆகியவைகளை கொடுத்துவிட்டு, வழக்கமாக தவம் செய்துக்கொண்டிருக்கும் மலை குகைக்குச் சென்று, தவக்கோலத்திலேயே அதிசயமாக காற்றில் மறைந்து சென்றதாக கூறப்படுகிறது (ஆகையால் இவருக்கு பிருந்தாவனம் இல்லை).

பத்ரி சேத்திரத்தில், ஸ்ரீ மத்வாச்சாரியார் எப்படி காற்றில் மறைந்து சென்றாரோ.. அது போல், ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரும் காற்றில் மறைந்து சென்றுவிட்டார். ஆகையால், மத்வருக்கு பின் காற்றில் மறைந்த மகான்களில், இரண்டாவது மகான் என்ற பெயரை புருஷோத்தம தீர்த்தர் பெற்றிருப்பது மிக பெரிய பாக்கியம்!ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரை, “மடி ஸ்வாமி’’ (Madi Swamy), “ஹுலி ஸ்வாமி’’ (Huli Swamy), “குஹே ஸ்வாமி’’(Guhe Swamy) என்றும் மரியாதையுடன் உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படுகிறார். மேலும், பல தருணங்களில் வெவ்வேறு ரூபத்தில், புருஷோத்தம தீர்த்தரை கண்டதாக உள்ளூர் பக்தர்கள் பூரிப்போடு பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

எப்படி செல்வது?

கர்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து 45கி.மீ தூரத்தில், மகான் ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தர் காற்றில் மறைந்த மலை குகை உள்ளது. இந்த மலை குகைக்கு எதிர்புறத்தில் அதாவது சுமார் ஒரு கி.மீ., தொலைவில், மகான் ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரின் மூலபிருந்தாவனமும் உள்ளது. அதே போல், இங்கிருந்து சுமார் 9 கி.மீ., பயணித்தால் “ஸ்ரீ அப்ரமேய சுவாமி கோயிலை அடைந்துவிடலாம். மேலும், பெங்களூர் மார்க்கமாக, சுமார் 61 கி.மீ., பயணித்தாலும் வரலாம். ஆக, முதலில் ஸ்ரீ அப்ரமேய சுவாமி கோயிலை தரிசித்துவிட்டு, பின்னர் ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரை தரிசித்துவிட்டு, பின்னர் ஸ்ரீ புருஷோத்தம தீர்த்தரின் மலை குகையை தரிசிக்கலாம்.

ரா.ரெங்கராஜன்

Tags : Sri ,Viasarajr ,Puri Sethra ,Brushotamar ,Sri Purushotama Tirtha ,Sri Jayatwaja Thirthar ,Viasaraja ,Monastery ,
× RELATED திருவாரூர், தியாகராஜர் திருக்கோயில்