பகுதி 12
கடந்த சில பகுதிகளில் பாதுகைகளில் பதிக்கப்பட்டிருக்கும் ரத்தின கற்களின் பிரபாவத்தை ஸ்வாமி தேசிகனோடு சேர்ந்து அனுபவித்த நாம் இப்போது “பிம்ப ப்ரதி பிம்ப பத்ததி” யின் வாயிலாக, ரத்தின கற்களில் காணப்படும் பிரதி பிம்பங்கள் பற்றி அனுபவிக்க உள்ளோம்.
ஶௌரே: ஶுத்தாந்த நாரீணாம் விஹாரமணி தர்பணம்|
ப்ரஸ்தேரிவ ஸம்ஸ்தாநம் பதத்ராணம் உபாஸ்மஹே
ஸ்ரீ ரங்க நாதனின் பிராட்டிகள் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டு ரங்கன் அவன்தான் தங்கள் அரங்கத்தை நோக்கி வரும்போது, தங்களது ஆடை ஆபரணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றும் தாங்கள் தலையில் சூடியுள்ள பூக்கள் நேர்த்தியாக இருக்கிறதா என்று பார்க்க பயன்படுத்தப்படும் கண்ணாடியாக, ரங்க நாதனின் பாதுகையில் பதிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தின கற்களின் பிரதிபிம்பத்தை பார்க்கிறார்களாம். தெளிவு என்பதை தன்னகத்தே கொண்டு இந்த ஜெகத்திற்கே கண்ணாடியாக திகழும் அந்த பாதுகையை உபாசிக்கிறோம் என்பதே இந்த பத்ததியின் முதல் ஸ்லோகத்திற்கான பொருள்.
அஷ்டதிக் பாலகர்கள் (கிழக்கு திசைக்கு அதிபதியான இந்திரன், தென் கிழக்கின் அதிபதியான அக்னி, தெற்கு திசை அதிபதியான எமன், தென்மேற்கின் அதிபதியான நிருதி, மேற்கின் அதிபதியான வருணன், வடமேற்கின் அதிபதியான வாயு, வடக்கு திசையின் அதிபதியான குபேரன், வடகிழக்கு திசை அதிபதியான ஈசானன்) அனைவரும் வந்து பாதுகையை வணங்கி நிற்கிறார்களாம். அப்போது அந்தப் பாதுகையில் இருக்கக்கூடிய இரத்தின கற்களில் தங்களுடைய பிரதிபிம்பத்தை கண்டு, புதிய திக்பாலகர்களை தான் பெருமாள் நியமித்து விட்டாரோ என பயந்து உன்னை சரணடைந்தபடி அல்லவா நிற்கின்றனர், என வியக்கிறார் ஸ்வாமி தேசிகன்.
பகவானின் லீலையை பகவானுக்கே காட்டித் தரும்படி பிரதிபலிக்கிறதாம், பாதுகை. எப்படித் தெரியுமா? ரங்கநாத பெருமாள் சஞ்சாரத்திற்காக புறப்படும் சமயம் தன்னுடைய திருவடியை பாதுகையில் வைக்கும்போது, அந்தப் பாதுகையில் இருக்கும் பச்சை நிற இரத்தின கல்லில் தன்னுடைய பிரதிபிம்பத்தை பார்க்கிறான். அதைப் பார்த்ததுமே, பெருமாள் ஒரு காலத்தில் ஆலிலையின் மீது சயனித்திருந்ததை அவருக்கே அந்தப் பாதுகை எடுத்து காட்டுவது போல இருக்கிறது என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
அனைத்து விதமான மங்களங்களுக்கும் மங்கள தேவதையாக விளங்க கூடிய, பாதுகா தேவி எப்படி பொன்மயமாக இருக்கிறாள் என்பதை 22 வது பத்ததியான “காஞ்சந பத்ததி” யின் வழி அருளி இருக்கிறார் ஸ்வாமி தேசிகன். பகவானுடைய திருவடிக்கு தக்கதாய், அரசனுக்குத் தக்க அரசியைப்போலே, ரங்கராஜ பெருமானுக்கு எல்லா விதங்களிலேயும் சிறந்த மனையாளாக, ராணியாக, தங்க மயமானவளும், சிறப்பைப் பெற்றவளுமான பாதுக தேவி வீற்றிருக்கிறாள். மஹாலட்சுமியின் ஒப்புயற்றவற்ற இன்னொரு திருமேனி போல் இருக்கக் கூடிய பாதுகாதேவியை வணங்குகிறேன். எம்பெருமான் என்னும் தத்துவத்தில் இணைந்தவள் அல்லவா மஹாலக்ஷ்மி தாயார்? அந்த மஹாலக்ஷ்மி தாயாரைப் போலவே பெருமாளின் சரீரத்தில் இடம்பெற்றவளான தங்க மயமான அந்த பாதுகா தேவியை நான் வணங்குகிறேன் என்றபடியே இந்தப் பத்ததியின் முதல் ஸ்லோகத்தை தொடங்குகிறார் ஸ்வாமி தேசிகன்.
கல்யாண ப்ரக்ருதிம் வந்தே பஜந்தீம் காஞ்சந ஶ்ரியம்
பதார்ஹாம் பாதுகாம் ஶெளரே: பத ஏவ நிவேஶிதாம்
காவிரி நதிக்கு பொன்னி என்ற பெயர் வரக் காரணமாக இருந்ததே பொன்மயமான பாதுகை ஸ்ரீ ரங்கத்திற்கு அந்த அரங்கனோடு வந்து எழுந்தருளியதால்தான் என்கிறார் ஸ்வாமி தேசிகன். பெருமாளின் தங்கப் பாதுகையே! பெருமாளோடு காவேரிக்கரையில் தங்கிய பாதுகையே! அந்த ரங்கநாத பெருமாள் காவேரிக் கரையில் எழுந்தருளி, நீ அந்த புனித மணலை அலங்கரித்தது என்றைக்கோ, அன்று முதல்தான் காவேரிக்கு உன்னுடைய தொடர்பை பெற்று, தங்கமயமான ஆறாக மாறி, பொன்னி அல்லது கநகபாகா என்ற பெயர் ஏற்பட்டது நிச்சயம் என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
பதினெட்டாம் பெருக்கன்று காவிரி ஆற்றில் பொற்றாமரைகள் நிரம்பி இருப்பதை போல காட்சி தந்ததாம் ஸ்வாமி தேசிகனுக்கு காரணம் என்ன தெரியுமா? ஆடிப் பெருக்கன்று, காவேரியில் வரக்கூடிய புது வெள்ளத்தை தன் திருவருள் கொண்டு கடாக்ஷிக்க ( நவம் ப்ரவாஹம் நிஶாமயிதும் ப்ரவருத்தே) ரங்கநாதப் பெருமாள் பாதுகையில் தனது திருவடியை பதித்து எழுந்தருளுகிறார். அப்போது பாதுகையானவள் என்ன செய்கிறாள் என்றால், தன்னுடைய தங்கமயமான ஒளி மூலமாக காவேரியை கடாக்ஷிக்கிறாளாம். அப்போது பாதுகையின் பொன்னிற ஒளி அந்த பொன்னியாற்றில் பொற்றாமரைகள் நிறைந்து நிற்பதை போன்ற காட்சியை உண்டாக்குகிறதாம் ( ஹேமாரவிந்த பரிதாமிவ ஹேமஸிந்தும்) என்கிறார்.
சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் என்று பெருமாளுக்கு தான் ஏதேனும் ஒரு வகையில் கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டி நிற்பவர், ஆதிசேஷன். பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்ள பாம்பணையாக இருக்கக் கூடிய அந்த ஆதிசேஷன், இதோ திருமாலின் திருவடியின் நித்ய கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே பாதுகையாக மாறி விட்டார் போலும். அப்படி அந்த ஆதிசேஷனை விசேஷமாக கொண்டாடும் பத்ததியாக “ ஶேஷ பத்ததி” அமைந்திருக்கிறது.
நிவாஸஶய்யாஸநபாதுகாம் ஶுகோ-
பதாநவர்ஷாதபவாரணாதிபி:
– என்று அருளி இருக்கிறார், ஆசார்யர்களுள் முதல்வரான ஸ்வாமி ஆளவந்தார்.
பத்மாபோகாத் பாதுகே! ரங்கபர்து:
பாதஸ்பர்ஶாத் போகமந்யம் ப்ரபித்ஸோ:
ஶேஷஸ்யைகாம் பூமிகாம் அப்ரவீத் த்வாம்
ஆசார்யாணாம் அக்ரணீர் யாமுநேய:
– என்று ஸ்வாமி தேசிகன், பாதுகையே! ஆதிசேஷன் பெருமாள் திருவடியைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாக்கியத்தை பெற வேண்டும். ஆனால், அது மஹாலக்ஷ்மி பெறும் பாக்கியத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி, என்று எடுத்த உருவம் என்று ஆசார்யர்களில் உயர்ந்தவரான ஆளவந்தார், உன்னை ஆதி சேஷனின் அவதாரமாகக் கூறினார் என்கிறார்.
ராமாவதாரத்தில் லக்ஷ்மணனாக திருஅவதாரம் செய்து ராமபிரானோடே இருந்த ஆதிசேஷனேதான், கிருஷ்ணாவதாரத்தில் பலராமராக அவதரித்தார்.
பரதஸிரஸி லக்நாம் பாதுகே! தூர தஸ்த்வாம்
ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: ஶேஷபூத:
கிமிதமிஹ விசித்ரம் நித்யயுக்த: ஸிஷேவே
தஶரத தநய: ஸந் ரங்கநாத: ஸ்வமேவ
– என்று பாதுகையே! நந்திகிராமத்தில், நீ பரதன் தலையில் இருக்கிறாய். ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன் தனது உருவமான உன்னை, பரதன் தலையில் நீ இருந்தபோது உன்னைத் தூரத்தில் நின்றபடி வணங்கினான். இப்படி தன் உருவமாகவே உள்ள ஒருவரை மற்றவர் வணங்குவது வியப்பான செயலாக தோன்றினாலும் அது வியப்பே கிடையாது. எப்படித் தெரியுமா? திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டிருக்கும் அரங்கநாதன் ராமபிரானாலே ஆராதிக்கப்பட்டவன் ஆகிறான்.
உண்மையில் ராமனாக வந்ததும் ரங்கநாத பெருமாள் தானே?
இப்படி பல வித வியப்புக்களை திகட்டாமல் அளிக்கிறாள் பாதுகாதேவி. ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் அந்தப் பாதுகையின் பெருமையை பற்றி ஒவ்வொரு பத்ததி வாயிலாகவும் போற்றி அருளி இருக்கிறார்? பாதுகா தேவியின் பெருமைகளை அவள் அருளால் இன்னும் சில பகுதிகள் தொடர்ந்து அனுபவிப்போம்.
– பாதுகையின் பெருமை தொடரும்
நளினி சம்பத்குமார்
