×

சென்னையில் ஓர் உடுப்பி கிருஷ்ணர்!

திருவோணம் சிறப்புக் கட்டுரை 23-12-2025

அப்போது கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். திருவல்லிக்கேணி சுங்குவார் தெரு முழுவதும் ஒரே ஆட்டம், பாட்டம், உறியடி கொண்டாட்டம் என கிருஷ்ண ஜெயந்தி அன்று உடுப்பியில் எப்படி கோலாகலமாக இருக்குமோ, அதே போல் விழாக் கோலம் பூண்டிருந்தது. இதைக் கண்ட நாம், என்ன கோயில் என்று கோயிலின் முகப்பை பார்த்தால், “உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மந்திர்’’ என்று எழுதியிருந்தது. அப்படியே நாமும் அந்த விழாவில் பங்குக் கொண்டு, விழா முடியும் வரை இருந்தோம். ஹாஹா… அந்த உறியடி நிகழ்வு இன்னும் என் கண்முன்னே இருக்கிறது. விழா முடிந்ததும், இந்த கோயிலை பற்றி தெரிந்துக் கொள்ள கோயிலின் நிர்வாகி ராஜேஷ் ஆச்சாரிடத்தில் கேட்டோம். நாம் தெரிந்துக் கொண்டோம். நீங்களும், தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா?

பல சுவாரஸ்யங்கள் இந்த தொகுப்பில் இருக்கின்றன, வாருங்கள் செல்வோம்.

பக்தி மட்டுமே எதிர்பார்க்கும் கண்ணன்

இந்த “உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மந்திர்’’ சுமார் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோயிலில், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஆஞ்சநேயர், மகான் ஸ்ரீ வாதிராஜதீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனம், இவருடன் வாதிராஜரின் நான்கு சீடர்களின் மிருத்திகா பிருந்தாவனங்கள், அத்துடன் ஸ்ரீ பூதராஜர் மற்றும் ஸ்ரீ நாகர்கள் என பல ஸ்வாமிகளும் நிறைந்ததுதான் இந்த கிருஷ்ண மந்திர். இக்கோயில், உடுப்பி பெஜவார் மடத்தின் கீழ் இயங்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் ஸ்வாமிகளை பற்றி ஒவ்வொன்றாக தரிசித்து மகிழ்வோம். முதலில் ஸ்ரீ கிருஷ்ணர். கிருஷ்ணர் என்றாலே அழகுதானே! இக்கோயிலில் மட்டும் விதிவிலக்கா என்ன? கண்களுக்கு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார், ஸ்ரீ கிருஷ்ணர்.

உடுப்பியில் எப்படி கடக்கோலை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறாரோ அதே போல், இங்கும் கையில் கடகோளுடன் காட்சியளிக்கிறார் கிருஷ்ணர். பக்தியோடு இந்த கிருஷ்ணனை வழிபட்டால், “தேகஸ்ரமம்’’ அதாவது “தேகம்’’ என்பது உடலைக் குறிக்கிறது. “ஸ்ரம’’ என்பது உழைப்பை குறிக்கிறது. ஆகவே, தேகஸ்ரமத்தோடு கிருஷ்ணனை பிரதட்சண நமஸ்காரங்களை செய்தால் போதும், உடனே கிருஷ்ணர் அருள் புரிவார்.

அதற்கு ஒரு உதாரணம்; இக்கோயிலின் ஒரு பக்தர், சந்தான பிராப்திக்காக (குழந்தை பாக்கியம்) தம்பதி சகிதமாக (கணவன் – மனைவி இருவரும்) கிருஷ்ணரை வேண்டி, தொடர்ந்து மூன்று நாட்கள், காலை – மாலை என இரு
வேளைகளில் சுமார் 54 முறை கிருஷ்ணரை பிரதட்சணமாக வந்து, ஒவ்வொரு முறை பிரதட்சணத்திற்கும் ஒரு நமஸ்காரம் செய்து, மனமுருகி வேண்டியிருக்கிறார்கள். உடனே கிருஷ்ணன் வரத்தை தந்து அருளியிருக்கிறார்.

அதுவும், கிருஷ்ணனை பிரதட்சணம் செய்தால், ஒரே சந்நதியில் ஸ்ரீ ஆஞ்சநேயரும் இருக்கிறாரே…! ஸ்ரீ வாதிராஜரும் இருக்கிறாரே…! அவரின் சீடர்களும் இருக்கிறாரே…! சந்நதி முன்பாக ஸ்ரீ பூதராஜரும் இருக்கிறாரே…! ஆக, கிருஷ்ணரை பிரதட்சண நமஸ்காரம் செய்தால், இவர்கள் அனைவரையும் பிரதட்சண நமஸ்காரம் செய்த பலன் கிடைத்துவிடும் அல்லவா!

ஆஞ்சநேயர், மகான்கள், பூதராஜா ஆகியோர் கிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்வார்கள் தானே! ஆகையால், கிருஷ்ணன் மிக விரைவாகவே வேண்டியதை தந்துவிடுகிறார். இந்த பிரதட்சண நமஸ்காரம் செய்ய, ஒரு ரூபாய்கூட செலவு செய்ய வேண்டியதில்லை. பக்தி.. பக்தி.. பக்தி.. அது ஒன்று மட்டும் கிருஷ்ணன் இடத்தில் செலுத்தினால் போதும்.

ருக்மணியாக மாறும் கிருஷ்ணன்

மேலும், வெள்ளிக் கிழமை தோறும் கிருஷ்ணருக்கு “ருக்மணி அலங்கார சேவை’’ நடைபெறும். இக்கோயிலில் இந்த சேவை மிகவும் விசேஷமானதாகும். கல்யாண தடை அல்லது திருமணம் நடைபெற்று அவர்களுக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் இருந்தால், கிருஷ்ணருக்கு ஒரு சிறிய பட்டுப் புடவை சாற்றி வழிபட்டால், உடனே தடைகள் நீங்கும். இது பக்தர்களின் அனுபவ உண்மையாகும். வெள்ளி அன்று, நாள் முழுவதும் கிருஷ்ணர், ருக்மணி அலங்காரத்தில் இருப்பதை காணலாம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று இக்கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று இரவு, ஒருவருக் கொருவர் கலர் பொடிகளை தூவி கொண்டாடியும், உறியடி செய்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர். சுங்குவார் தெரு முழுவதும் கொண்டாட்டமாக காணப்படும். ஸ்ரீ கிருஷ்ணரின் ஊர்வலமும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். இங்கு, கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த அவல் பிரசாதம், வியாழன் தோறும் நிவேதிக்கப்படுகிறது.

அனுமனுக்கு தேனாபிஷேகம்

கிருஷ்ணருக்கு அடுத்த படியாக இருப்பவர், ஸ்ரீ ஆஞ்சனேயஸ்வாமி. இவருக்கு சனிக்கிழமை தோறும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. மேலும், “ஹரி வாயு ஸ்துதி’’ என்று சொல்லக்கூடி ஆஞ்சநேயருக்கென்று, பிரத்தேக ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டால், இக்கோயில் அனுமன் பக்கபலமாக இருந்து, உங்களின் அணைத்து விதமான காரியங்களையும் சித்தியடைய செய்கிறார். மேலும், சிலர் ஒரு மண்டலம் (48 நாட்கள்) காரியசித்திக்காக அனுமனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று, ஹரி வாயு ஸ்துதி பாராயணத்தோடு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

மொழி பெயர்த்த வாதிராஜர்

முதலில் நாம் கிருஷ்ணரை தரிசித்தோம், அடுத்ததாக ஆஞ்சநேயரை தரிசித்தோம், தற்போது இங்கு மிருத்திகா பிருந்தாவனமாக இருக்கக்கூடிய ஸ்ரீ வாதிராஜதீர்த்தரை தரிசிப்போம். ஸ்ரீ வாதிராஜர், மத்வ சம்பிரதாயத்தின் வழிவந்த மிக முக்கிய மகனாவார். 1480 – ஆண்டு, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே இருக்ககூடிய “அவினகரே’’ என்னும் இடத்தில் பிறந்தார். துவைத சித்தாந்தத்தின் மீது பெரிதும் ஈடுபாடுகளை கொண்டு, வேத சாஸ்திரங்களை கற்று, ஸ்ரீ வாகிஷதீர்த்தரிடத்தில் சீடராக சேர்ந்தார். இவரது வைராக்கிய ஞானத்தை கண்ட வாகிஷதீர்த்தர், சந்நியாசம் கொடுத்து தனக்கு பின் “ஸ்ரீ சோதே’’ மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும், வாதிராஜருக்கு வழங்கினார்.

பன்மொழிப் புலமை கொண்டவரான வாதிராஜர், மத்வ தத்துவங்கள் குறித்து பல நூல்களை எழுதி இருக்கிறார்.

மேலும் இவரது காலத்தில், உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தை புதுப்பித்து, தற்போது நடைபெற்று வரும் பர்யாய பூஜை வழிபாட்டு முறையை கொண்டுவந்தவர், ஸ்ரீ வாதிராஜர். மத்வரின் படைப்புகளால் பெரிதும் ஒரு உத்வேகம் கொண்டு, கன்னட மொழிக்கு அதனை மொழி பெயர்த்ததன் மூலம், அக்கால கன்னட இலக்கியங்களை வளப்படுத்திய பெருமையும் வாதிராஜருக்கு உண்டு.

இப்படி மகான் ஸ்ரீ வாதிராஜரின் பெருமைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். (நம் அருள் தரும் ஆன்மிகம் இதழில் “மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பிரத்தேகமாக மத்வ மகான்களை மட்டும் தரிசித்துவருகின்றோம். மிக விரைவில் “ஸ்ரீ வாதிராஜரையும்’’ தரிசிக்க இருக்கிறோம். அதில் விரிவாக வாதிராஜரை பற்றி காணலாம்)

அத்தகைய மிக பெரிய மகானின் மிருத்திகா பிருந்தாவனம் இந்த கிருஷ்ண மந்திரில் உள்ளது. அதுவும், வாதிராஜரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடமான கர்நாடக மாநிலம் சோதேவில் இருந்து மிருத்திகாவை (புனிதமண்) எடுத்து, பாத யாத்திரையாக, நடந்தே திருவல்லிக்கேணி வரை வந்திருந்து, இங்கு வாதிராஜரின் மிருத்திகையை வைத்து, பிருந்தாவனமாக பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

சோதேவில் இருந்து திருவல்லிக்கேணி கிட்டத்தட்ட 747 கிமீ., அப்பப்பா… சோதேவில் இருந்து திருவல்லிக்கேணி வரை நடந்தே வந்து பிரதிஷ்டை செய்வது என்பது சாதாரணமான செயல் அல்ல. ஸ்ரீ வாதிராஜரின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்.

சீடர்களோடு இருக்கிறார்

மேலும், சோதேவில் எப்படி வாதிராஜர் பஞ்ச பிருந்தாவன சமேதராக இருக்கிறாரோ.. அதாவது தனது நான்கு சீடர்களின் மூலபிருந்தாவனத்தோடு இருக்கிறாரோ.. அதே போல், இக்கோயிலிலும், தனது நான்கு சீடர்களின் மிருத்திகா பிருந்தாவனத்தோடு ஸ்ரீ வாதிராஜரும் இருக்கிறார். இது, இக்கோயிலின் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் வாதிராஜர், பூஜை செய்யும் சமயங்களில் பகவானுக்கு “ஹயக்ரீவ பிரசாதத்தை’’ செய்து நிவேதித்து, அதனை தன் தலைக்கு மேலே வைத்து, பகவானை தியானிப்பார். அந்த சமயத்தில், சாட்சாத் ஹயக்ரீவ ரூபியான பரமாத்மா, ஒரு குதிரையின் ரூபத்தில் வந்திருந்து, ஸ்ரீ வாதிராஜரின் முதுகின் பின்னால், மண்டியிட்டு நிவேதித்த அனைத்து ஹயக்ரீவ பிரசாதங்களையும் ருசிப்பார். ஆகையால்தான், இந்த தாத்பர்யத்தை நினைவு கூறும் விதத்தில், ஸ்ரீ வாதிராஜரின் அனைத்து படங்களின் பின்னால், ஒரு குதிரை இருக்கும். அதனையே நாம் சேவிக்கிறோம்.

குருவாரம் குருவிற்கு ஏற்ற நாள். அதாவது வியாழன், குரு ஸ்ரீ வாதிராஜருக்கு ஏற்ற நாள். ஆகையால், அன்றைய தினம் வாதிராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அப்போது வாதிராஜருக்காக “ஹயக்ரீவ’’ பிரசாதம் செய்து நிவேதிக்கப்படும். ஹயக்ரீவ பிரசாதம் என்பது கடலை பருப்பு, வெல்லம், தேங்காய், நெய், கலந்த ஓர் பிரசாதம். மிக அருமையாக ருசியாக இருக்கும்.

ஸ்ரீ வாதிராஜரின் ஜெயந்தி அன்றும், ஆராதனை அன்றும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும். வரும், 5.3.2026 முதல் 7.3.2026 வரை மூன்று நாட்கள் வாதிராஜருக்கு ஆராதனை நடைபெறுகிறது. 6.3.2026 அன்று தேரில் பவனி வருவார்.

சாபத்தால் விடுபட்ட பூதராஜர்

அதே போல், எங்கெல்லாம் ஸ்ரீ வாதிராஜர் பிரதிஷ்டை ஆகியிருக்கிறாரோ, அங்கெல்லாம் “ஸ்ரீ பூதராஜரும்’’ வலது பக்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். பெயருக்கு ஏற்றால் போலவே இவரின் உருவம் பூதம் போல் காட்சியளிக்கிறது. இவருக்கு ஒரு ஆன்மிக கதை கூறப்படுகிறது. நாராயணபட்டர் என்னும் மகாராஜா, ஒரு பிராந்தியத்தை ஆண்டு வந்தார். இவர் செய்த சில பாவத்தினால், இவருக்கு “ராட்சச சாபம்’’ ஏற்படுகிறது. அந்த சாபம் நிவர்த்தி பெற மகாராஜா, குருவை நாடினார். நாம் எந்த ஒரு விஷயத்திற்கும் குருவின் மூலமே அதனை சரிசெய்யவேண்டும். அப்படி மகாராஜா, மகான் ஸ்ரீ வாதிராஜரை நாடினார். வாதிராஜரோ.. சோதேவில் இருக்கக்கூடிய “ராம திருவிக்ரமர்’’ கோயிலுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, பிரதட்சண நமஸ்காரங்களை செய்து வழிபட்டால், உன் சாபம் தீரும் என்று உபாயம் கூறினார். அதன்படி, சோதேவில் இருக்கக்கூடிய ராம திருவிக்ரமர் கோயிலுக்கு சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, பிரதட்சண நமஸ்காரத்தை செய்து வழிபட்டார், நாராயண பட்டர். அடுத்த கணமே சாபம் நிவர்த்தியாகி, ருத்ர கணத்தில் போய் சேருகிறார்.

ஆகையால்தான், இவருக்கு “பூதராஜர்’’ என்ற பெயராகிறது. பூதராஜரை பிரார்த்தனை செய்து வழிபட்டால், பில்லி, சூனியம் போன்ற Bad Vibrations நீங்குகிறது. பூதராஜருக்கு சேவை செய்த பின்னர், அர்ச்சகர், மந்திரித்த தாயத்து ஒன்றும் கொடுப்பார்கள். இந்த பூதராஜரின் பூஜைகளை வயது வித்தியாசமின்றி அனைவரும் செய்யலாம். தேய்பிறை அமாவாசை அன்று, பூதராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், அமாவாசை அன்று பூதராஜருக்கு புளியோதரை நிவேதிக்கப்படும்.

பிரதட்சணம் நமஸ்காரம் சேவை

பொதுவாகவே, கோயிலுக்கு வெறும் கையில் நாம் செல்லக் கூடாது. ஆகையால், இரண்டு தேங்காய்களை எடுத்துக் கொண்டு இக்கோயிலுக்கு செல்ல வேண்டும். உங்களால் முடித்த பிரதக்ஷண நமஸ்காரங்களை செய்யுங்கள். அதன் பின்னர், தேங்காய்களை சந்நதி முன்பாக உருட்டிவிட வேண்டும். குறைந்தது மூன்று நாள்கள் பிரதட்சணம் செய்யவும். மூன்று நாள்கள் முடிந்தவுடன், ஒரு தேங்காய்யை உடைத்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து, அதனை அர்ச்சகர் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். அதே போல், ஸ்ரீ வாதிராஜருக்கும் மூன்று நாட்கள் பிரதக்ஷணம் நமஸ்காரம் சேவை செய்தால், மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இந்த சேவை செய்த பல பக்தர்களுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

தேங்காய் உருட்டல்

குருவிற்கு சேவை செய்யும் போது, “பூரண பழத்தோடு’’ சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு தாத்பர்யம். இதையே;
“பத்திரம் புஷ்பம் பலம் தோயம் யோ மீ பக்திய ப்ரயச்சதி’’
– என்று இதையே கிருஷ்ணர், கீதையிலும்கூட உபதேசம் செய்திருக்கிறார்.
அதாவது, ஸ்வாமிக்கு பக்தியோடு செய்கின்ற சேவைகளில்,
“பத்திரம்’’ – துளசி பத்ரங்களோ, வில்வபத்ரங்களோ சமர்ப்பணம் செய்வது.
“புஷ்பம்’’ – எந்த புஷ்பமாக இருந்தாலும், அவைகளை சமர்ப்பிப்பது.
“பலம்’’ – என்கின்ற அர்த்தத்துலே, அந்த பூர்ணபலமான நாம் தேங்காயினை வைக்கின்றோம். இதுதான் தேங்காயின் தாத்பர்யம்.
ஆகையால்தான் நாம் கோயிலுக்கு செல்லும் போது, குறிப்பாக வாதிராஜஸ்வாமி மடத்திற்கு செல்லும்போது, தேய்காயினை கொண்டுவந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பரிகாரஸ்தலம்

கோயில் அருகிலேயே சமுத்திரம் (மெரினா கடற்கரை) இருப்பதால், “பிதுர் சாப நிவர்த்திக்கு’’ இங்கு சில பரிகாரங்கள் விசேஷமாக செய்யப்படுகிறது. (சமுத்திரம் இருந்தால் பிண்டம் முதலானவற்றை விசர்ஜனம் செய்ய ஏதுவாக இருக்கும்) அதாவது யாருக்காவது பிதுர் தோஷம் ஏற்பட்டிருந்தால், அந்த தோஷம் நீங்க பரிகாரங்களை செய்ய ஏற்ற இடமாக இக்கோயில் திகழ்கிறது. மேலும், இங்கு “திலஹோமம்’’, “நாராயணபலி’’ போன்றவைகளும்
பக்தர்களுக்காக செய்யப்படுகிறது. இது போன்ற பரிகாரங்களை, ராமேஸ்வரம், காசி போன்ற தலங்களில் செய்வது விசேஷம் என்றாலும், அங்கு சென்று செய்ய முடியாதவர்கள், இக்கோயிலில் செய்யலாம். இங்குள்ள சமுத்திரமும் விசேஷம்தானே!

மேலும், இக்கோயிலில் நாகர்கள் பிரதிஷ்டையாகியிருப்பதால், சர்ப்ப தோஷங்கள், ராகு தோஷங்கள் போன்ற தோஷத்திற்கும் இங்கு பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

வளர்பிறை பஞ்சமி அன்றும், நாகபஞ்சமி கருடபஞ்சமி அன்றும், நாகர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அப்போது, நெல் பொறியில் செய்யக்கூடிய பொரி உருண்டை நிவேதிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

ஐந்து முறை பர்யாயம்

2019-ஆம் ஆண்டு, பிருந்தாவனம் ஆன, “ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தருக்கு’’ மிகவும் பிடித்த கோயிலாகும். எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறாரோ.. அப்போதெல்லாம் இக்கோயிலுக்கு வந்திருந்து, பக்தர்களை ஆசீர்வதிப்பார். அவர் வந்துபோகும் சமயங்களில், இக்கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர், பல சாதனைகளை புரிந்திருந்தாலும் மிக முக்கியமாக, உடுப்பியில் ஐந்து முறை பர்யாயம் செய்தவர். மகான் ஸ்ரீ வாதிராஜதீர்த்தர் மட்டுமே ஐந்து முறை பர்யாயம் செய்திருக்கிறார். அவருக்கு பின், ஐந்து முறை பர்யாயம் செய்தவர், விஸ்வேஷ தீர்த்தர்தான். பர்யாயம் என்பது எட்டு மடம் மடாதிபதிகள், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் உடுப்பி கிருஷ்ணனை பூஜை செய்வார்கள். இதுவே பர்யாயம் என்பதாகும். பல பீடாதிபதிகள் மூன்று முறை பர்யாயம் செய்திருப்பார்கள். ஒரு சிலர் நான்கு முறை செய்திருக்கலாம். ஆனால், ஐந்து என்பது இருவர் மட்டுமே, ஒருவர் வாதிராஜர், இன்னொருவர் விஸ்வேஷ தீர்த்தர். இத்தகைய பெருமை விஸ்வேஷதீர்த்தருக்கு உண்டு. இந்த சமயத்தில் அவரையும் நினைவு கூறுகிறோம்.

கைங்கரியம்

இக்கோயிலில், பல திருப்பணி வேலைகள் நடைபெறவுள்ளதால், அதில் கைங்கரியம் செய்ய உள்ளவர்கள் தொடர்புகொள்ள: ராஜேஷ் ஆச்சார் – 8056066910.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை: 5.00 முதல் 8.00 வரை நடைதிறந்திருக்கும்.
எங்குள்ளது: நம்பர்:20 / 39 உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மந்திர், சுங்குவார் ஸ்ட்ரீட், திருவல்லிக்கேணி, சென்னை – 05.

Tags : Udupi ,Krishna ,Chennai ,Kṛṣṇa Jayanti ,Thiruvallikeni Chungwar Street ,
× RELATED ராகு கேது எதைக் குறிக்கிறது?