×

நல்லவர்களைக் காப்பாற்ற கடவுள் துணை வரும்!

மகாபாரதம் - 82

விராட மன்னர் தன் படை ஜெயித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவரும் உற்சாகமாகி தன் போர் திறமையைக் காட்டினார். சுதர்மாவின் படைகளை ஊடுருவிப் போனார். அவர் முன்னே போவதால் அவருடைய படை, பின்னே அடர்த்தியாக சுதர்மாவின் படையை கிழித்துக் கொண்டு போயிற்று. தருமருடைய தைரியம் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. சுதர்மாவை நெருங்கி மிகக் கடுமையான பாணங்களால் அவனை தாக்கினார். அவன் அடிதாங்காமல் விராட மன்னனை கூரிய அம்புகளால் துளைத்தான். விராட மன்னர் ரத்தம் வழிய நின்றார். அப்போது இருட்டத் துவங்கியது.

போரினால் ஏற்பட்ட தூசால் இன்னும் இருட்டு அதிகமாகியது. கலைந்து கிடந்த சேனையை மறுபடியும் தருமர் ஒழுங்குபடுத்தினார். எப்படி தாக்கவேண்டும் என்று போரை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உபதேசம் செய்தார். யார் யார் எந்தெந்த வகையில் நகர வேண்டும், என்னவிதமான சப்தத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று எக்காளம் ஊதி காண்பித்தார். அப்போது சந்திரன் உதித்து போர்களத்தில் வெளிச்சம் பரவியது.

விராட மன்னன் அல்லாது வேறு யாரோ கட்டளையிட விராட தேசத்து படைகள் ஒன்றாவதும், வியூகம் வகுப்பதையும் கண்டு சுதர்மா கோபமுற்றான். மன்னனை மடக்கி விட்டால் மொத்தமும் அடங்கும் என்று தன்னுடைய தளபதிகளை ஒன்று சேர்த்து மிக வேகமாக விராட மன்னனை நோக்கித் தாக்கினான். கதையால் அவர் தேரை அடித்து உடைத்தான். குதிரைகளை அவிழ்த்து துரத்தினான்.

சாரதியை கொன்றான். சுற்றியுள்ள படை வீரர்களை கடுமையாக தாக்கினான். விராட மன்னனின் தலைமுடியை தூக்கி தன்னுடைய தேரிலே வைத்துக் கொண்டு வெகு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். விராட மன்னன் கைது செய்யப்பட்டு சுதர்மா அபகரித்துக் கொண்டு போகிறான் என்பதை தருமபுத்திரருக்கு சொல்லப்பட்டது. தருமபுத்திரர் பீமனை நோக்கி, ‘‘எப்படியாவது விராட மன்னனை காப்பாற்று அவரை விட்டு விடாதே. அவர் பகைவரிடம் சிக்கிக் கொண்டார் என்பது தெரிந்தால், நம் படை வீரர்கள் பலம் இழப்பார்கள். சுதர்மாவை அடித்து நொறுக்கு’’ என்றுஆவேசமாகக் கத்தினார்.

அவர் குரலில் தெரிந்த ஆவேசத்தைக் கண்டு பீமன் வியந்தான். மிக வேகமாக குதிரையில் ஏறி சுதர்மாவின் தேரை நெருங்கினான். தாவி ஏறி சுதர்மாவை எட்டி உதைத்தான். தேர் நொண்டத் துவங்கியது. அவன் தேரிலிருந்து இறங்கி, ஒரு பெரிய மரத்தை பிடுங்க எத்தனித்தபோது, ‘வேண்டாம் நில்’ என்று தருமபுத்திரர் கூச்சலிட்டார். ‘அதை இப்போது செய்யாதே. உன்னை வெளிக்காட்டாதே, வேறு ஆயுதம் எடுத்துக் கொள்,’ என்று சொல்ல, பீமன் நிதானமானான்.

நகுலனும், சகாதேவனும் தேர் கொண்டு வர, பீமன் அதில் ஏறிக் கொண்டான். நகுல, சகாதேவர் தேரின் பக்கவாட்டில் நின்றுகொள்ள, நடுவிலிருந்தபடி மிக வேகமாக அந்தத் தேரை சுதர்மாவை நோக்கி நகர்த்தினான். ஒரு வில்லை எடுத்துக் கொண்டு இடையறாது அம்பு மழை பொழிந்தான். எதிரிகள் தோற்றுவிட்டார்கள் என்று நினைத்த சுதர்மா மறுபடியும் கூச்சலிட்டு வீரர்களை ஒன்று சேர்த்தான். பீமனும், நகுலனும், சகாதேவனும் சுதர்மாவை நோக்கி போவதைப் பார்த்து மத்ஸ்ய வீரர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் அந்தத் தேரை தாக்கினார்கள்.

தங்கள் அரசரை மீட்க போர் வீரர்கள் உற்சாகமடைவதைக் கண்டு அவர்களும் வேகமானார்கள். தெற்கத்தில் இருந்த படை மத்ஸ்ய வீரர்களால் கடுமையாக அடிபட்டது. நான்கு பக்கத்திலிருந்தும் சுதர்மா கடுமையாக தாக்கப்பட்டான். அவன் குதிரைகள் கொல்லப்பட்டன. சாரதியை எட்டி உதைத்து விரட்டினான். சுற்றி இருந்த படைவீரர்கள் சிதறி ஓடினார்கள். தேர் இன்றி சுதர்மா தரையில் நின்றான். சுதர்மா தரையில் நின்று தவிப்பதை கண்டு அவன் துணைக்கு சில தளபதிகள் வந்தார்கள். அவர்களும் அடிபட்டார்கள்.

விராட மன்னன் தேரிலிருந்து குதித்து பீமனுடைய தேரில் ஏறிக் கொண்டார். த்ரிக்காத் ராஜரான சுதர்மா போர் களத்தை விட்டு ஓடத் துவங்கினான். ஓடுகின்ற சுதர்மாவை பீமசேனன் துரத்திக் கொண்டு ஓடினான். ‘‘நில். எங்கே ஓடுகிறாய்? உன் வீரத்தைக் காட்டு. எதற்கு பயப்படுகிறாய்’’ என்றெல்லாம் கேலி செய்தவாறு பின்தொடர்ந்தான். மான்மீது சிங்கம் விழுவது போல எகிறி அவன்மீது பீமன் விழுந்தான். தரையோடு தரையாக நசுக்கினான். கேசத்தைப் பற்றி சுழற்றினான். தூக்கி பூமியில் அடித்தான்.

முழங்காலால் முகத்தில் இடித்து நசுக்கினான். மாறிமாறி முகத்தில் அடித்தான். நெஞ்சிலும், முதுகிலும் குத்தினான். நசுங்கி ரத்த விளாறாக இருக்கின்ற சுதர்மாவை தருமரிடம் இழுத்து வந்தான். பயமும், தள்ளாட்டமுமாக உடம்பு முழுவதும் ரத்தமுமாக சுதர்மா பீமன் கையில் சிக்கிக் கொண்டபோது பீமன் உரக்கச் சொன்னான். ‘‘முட்டாளே, நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால் ஒரே ஒரு நிபந்தனை. நான் விராட மன்னனுக்கு அடிமை என்று சொல். விட்டு விடுகிறோம்” என்று உலுக்கினான். தருமபுத்திரர் எதிரே நிறுத்தினான்.

‘‘பீமா, ஒன்றும் செய்யாதே. இவன் நமக்கு எதிரி அல்ல. வெறும் வீண் ஜம்பத்தில் இங்கு வந்து மாட்டிக் கொண்டு அடிபடுகிறான். நீ விராட மன்னனுக்கு அடிமைதான். ஆனாலும் நீ விடுவிக்கப்பட்டாய், போ. இனி போருக்கெல்லாம் வராதே’’ என்று சொல்ல, பீமன் அவன் கழுத்தை பிடித்து நெட்டித் தள்ளினான். அந்த யுத்த பூமியில் உடம்பெல்லாம் தேய்த்தவாறு சுதர்மா விழுந்து ஒரு தேர் சக்கரத்தில் முட்டிக் கொண்டு மயக்கமடைந்தான். தருமபுத்திரர் வெறியோடு கத்தினார். ‘‘போய் சொல்லுங்கள். விராட மன்னர் போரில் ஜெயித்து விட்டார் என்று சொல்லுங்கள்.

எதிர்த்து வந்த சுதர்மாவை அடித்து உதைத்து புறம்தள்ளி விட்டார் என்று சொல்லுங்கள். சுதர்மா தோற்று ஓடி மயக்கமடைந்து விட்டான் என்று சொல்லுங்கள். அரண்மனையை அலங்கரிக்கச் சொல்லுங்கள். தீபங்களை ஏற்றச் சொல்லுங்கள். மங்களப் பொருட்களோடு கன்னிகைகள் வரட்டும். வேதங்கள் முழங்கட்டும். ஆடல் பாடல்கள் நடக்கட்டும். மன்னருக்கு மகத்தான வரவேற்பு  கிடைக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளைப் பார்த்து கூச்சலிட்டார்.

அதிகாரிகளும், தளபதிகளும் வெகு விரைவாக போர்களத்திலிருந்து குதிரையை திருப்பிக் கொண்டு விராட தேசம் நோக்கி ஓடினார்கள். மிகப்பெரிய சிரிப்புடன் தேரில் சாய்ந்தபடி யுதிஷ்டர் அருகே வீற்றிருக்க, விராட மன்னர் நிதானமாய் ஊருக்குத் திரும்பினார். வழிநெடுக இருக்கின்ற வீரர்களைப் பார்த்து கை அசைத்தான். அவர்களை தொட்டுத் தடவினான். ‘‘நீங்கள் இல்லாவிட்டால் இந்தப் போரில் நான் ஜெயித்திருக்க முடியாது,’’ என்று யுதிஷ்டரைப் பார்த்து குழையும் குரலில் பேசினார்.

‘‘அற்புதமாக சண்டை போட்டீர்கள். உங்கள் ஆற்றல் அதிசயமாக இருக்கிறது. வெறும் சூது விளையாடுபவரா நீங்கள்? இல்லை, பரம்பரை போர் வீரர். யார் அந்த பல்லவன்?’’ ‘‘சமையற்காரன்.’’ ‘‘அடேயப்பா... அவனால்தான் இந்த போர் ஜெயித்தது. அவன்தான் என்னை பல இடங்களில் காப்பாற்றினான். அவன்தான் சுதர்மாவை அடித்து நொறுக்கினான். அவன் அடியில் எத்தனை பேர் விழுந்தார்கள். எவ்வளவு பலம். எத்தனை ஆக்ரோஷம். அவன் தேரை மிதித்து உடைக்கிறான் என்றால் அந்த உடம்பில் என்ன பலம் இருக்கும். அவன் அறைந்தால் யானைகள் சுருண்டு விழுகின்றன. எங்கு அடிக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தெரிகிறது. நகுல, சகாதேவரும் எதிரிகளை வேகமாக துரத்தினார்கள். உங்களுக்கெல்லாம் நான் மிகுந்த நன்றி சொல்கிறேன்.

உங்களுக்கு என் அரண்மனையில் இனி வேலை இல்லை. நீங்கள் இஷ்டம்போல சஞ்சரிக்கலாம். உங்களுக்கு என்ன வேலை பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது எதுவும் செய்யாதும் இருக்கலாம். உங்களுக்கு வேண்டிய துணிமணிகளும், பொற்காசுகளும், நவரத்தினங்களும், சொகுசான மாளிகைகளும், வேலைக்காரர்களும், பசுக்களும், எருதுகளும், குதிரைகளும், யானைகளும் நான் பங்கிட்டுத் தருகிறேன். என் தேசத்தை நீங்கள் காவல் காத்து ரட்சிக்க வேண்டும்’’ என்று யுதிஷ்டரை நோக்கி கை கூப்பினார்.

ஜெயித்த அந்த நேரம் மனம் உறுத்தி, இந்த வெற்றி தன்னால் ஆனது அல்ல என்பது தெளிவாக புரிந்து அருகிலே இருக்கின்ற யுதிஷ்டருக்கு தன்னை மீறி நன்றி சொன்னார். மனிதர்களுக்கு சில சமயம் அவர்களையும் அறியாமல் நல்ல குணங்கள் வெளிவந்து விடுகின்றன. பசுக்களை துரத்திக் கொண்டு வெகுதொலைவு போய் விட்ட சுதர்மாவைத் துரத்திக் கொண்டு போனபடியால் விராட தேசம், ஒருநாள் தொலைவில் இருந்தது. போரில் படைகள் சோர்ந்து போயிருந்ததால் அதிகம் விரட்டாமல் நிதானமாக, அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

சுதர்மா மீது கர்ணனுக்கு நம்பிக்கை இல்லை. ‘‘இவன் வாய்ச்சாடகன். முன்னே போகிறான் என்பதால் சரி என்று விட்டுவிட்டேன். நாம் விராட தேசத்தை தாக்க வேண்டும். இவன் தெற்கேயிருந்து தாக்கியிருக்கிறான். நாம் வடக்கே போவோம். சுசர்மனை நோக்கி விராட தேசத்து அரசன் தன் படைகளுடன் போயிருக்கிறான். விராட தேசத்து கோட்டையும், அரண்மனையும் படைகளற்று இருக்கின்றன. இந்த நேரம் வடக்கே போய் அவர்களுடைய பசுக்களை கவர்ந்து வருவோம்’’ என்று சொல்ல, துரியோதனன் சம்மதித்தான்.

துரோணர், கிருபர், பீஷ்மர், அஸ்வதாமன், சல்லியன், துச்சாதனன், துரியோதனனோடு பெரும் படை கிளம்பி விராட தேசத்தின் வடக்கேயிருந்து உள்ளே நுழைந்தது. ஊருக்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை அவர்களுடைய தேர்கள் வளைத்துக் கொண்டன. இன்னும் வடக்கே நகர்த்தின. இடையர்கள் கைகளால் போராடி பார்த்தார்கள். தடிகளும், கைகளும் வெட்டப்பட்டன. சவுக்கால் விளாறப்பட்டார்கள். தலையில் அடிக்கப்பட்டார்கள். கொத்தாக பிடித்து தூக்கிசேற்றில் போடப்பட்டார்கள். அல்லது தேரின் பின்புறம் கட்டி தரதரவென்று இழுத்து வரப்பட்டார்கள். மீதமுள்ள இடையர்கள் பயந்து ஓடவேண்டும் என்பது போல சித்ரவதை செய்தார்கள்.

அவர்கள் நினைத்தபடியே சில இடையர்களை துன்புறுத்த பல இடையர்கள் பின்வாங்கினார்கள். தலைதெறிக்க காட்டுக்குள் ஓடினார்கள். ஒருவன் தேர் ஏறி அரண்மனை நோக்கி ஓடினான். அரண்மனையில் மன்னர் இல்லையென்று தெரியும். ஆனால், யாரிடம் சொல்வது என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டே விராட தேசத்து அரண்மனையை நெருங்கினான். உள்ளே ஓடினான். யார் இருக்கிறார்கள் என்று கேட்டான். விராட மன்னனின் மகன் உத்தரன் என்று சொன்னார்கள். ஆள் இல்லாத அரண்மனையில் கவலையாக படியேறி உத்தரன் முன்பு நெடுக விழுந்தான். எழுந்தான்.

கை கூப்பினான். உத்தரனைச் சுற்றி கன்னிப்பெண்கள் அவனோடு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவனைச் சீண்டியும், அவனால் சீண்டப்பட்டும் கிடந்தார்கள். ஒரு அரசனைப்போல ஆசனத்தில் உட்கார்ந்து இருந்தவன், எதிரே யாதவன் வந்து விழுந்ததும் அவர்களெல்லாம் பயந்து எழுந்திருந்தார்கள். அவர்கள் பயம் உத்தரனுக்கு அதிக கம்பீரத்தை கொடுத்தது. ‘‘எதற்கு பயம். என்ன ஆயிற்று உனக்கு. எழுந்திரு.

எதுகுறித்தும் பதறாதே. நான் இருக்கிறேன். என்ன விஷயம் சொல்.’’ என்று மிக ஆதூரமாக் கேட்டான். அவனைச் சுற்றியுள்ள பெண்கள் இந்தப் பேச்சுக்கு கண் சொருகினார்கள். எப்பேர்பட்ட புருஷன் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். உத்தரனுக்கு அது புரிந்தது. ‘‘உங்களுடைய பசுக்களையெல்லாம் கௌரவர்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள். மொத்தமாக வளைத்து விட்டார்கள். எங்களை அடித்து துவைத்தார்கள். பலரை தேரில் கட்டி இழுத்தார்கள். சிலரை சேற்றில் தள்ளினார்கள்.

சவுக்கால் விளாறினார்கள். ஆனால் பசுக்கள் மொத்தமும் அவர்களிடையே போய்விட்டன. அவர்கள் வடக்கே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது பசுக்களை நாம் மீட்க வேண்டும். அரண்மனையில் அரசர் இருப்பார் என்று நினைத்து வந்தேன். நீங்கள்தான் இருக்கிறீர்கள். உங்களைப் பற்றி உங்கள் தந்தையார் பெரிதும் சொல்லியிருக்கிறார். எனக்குப் பிறகு ஆளப் போகிறவர் இளவரசன் உத்தரன்தான் என்று சொல்லியிருக்கிறார். பலரும் உங்களை நம்பியிருக்கிறார்கள். படை தளபதிகள் உங்களை வணங்குகிறார்கள்.

இது உங்கள் வீரத்தை காட்ட வேண்டிய சமயம். கௌரவர்களை அடித்து உதைத்து நம் பசுக்களை நீங்கள் மீட்டே ஆகவேண்டும். உடனே கிளம்புங்கள். நீங்கள் போருக்கு தயாராக வேண்டிய நேரம் இது’’ என்று அவசரப்படுத்தினான். ‘‘கவலைப்படாதே. யாதவனே, நான் இருக்கிறேன். கௌரவர்களை அடித்து நொறுக்குவேன். நான் யுத்தம் புரிந்து நீ பார்த்ததில்லை அல்லவா. நிச்சயம் பார்ப்பாய். இதற்கு முன் யுத்தம் நடந்திருக்கிறது. எனக்கு நல்ல சாரதி ஒருவன் கிடைத்தான்.

அந்த யுத்தத்தில் அற்புதமாக நான் ஜெயித்தேன். இப்போது எனக்கு சாரதி இல்லை. ஒரு நல்ல சாரதி கிடைத்தால் கௌரவர்களை கதற கதற அடிப்பேன். பீஷ்மருக்கு நான் யார் என்று தெரிய வைப்பேன்’’ என்று உரத்த குரலில் சொல்ல, சுற்றியுள்ள பெண்களெல்லாம் வாய் பொத்திக் கொண்டு வியப்போடு பார்த்தார்கள். இது நடக்குமா, பீஷ்மரை எதிர்ப்பாரா இவர், என்றெல்லாம் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

‘‘இப்போதே கிளம்புகிறேன். எங்கே, கவசம் எங்கே?’’ என்று சொல்ல, அந்தப் பெண்களுக்கு சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த பிருங்களைக்கு உத்தரனுடைய வீராவேச வசனங்கள் காதில் விழுந்தன. அவனை நன்கு அறிந்து, தொலைவிலிருந்து அவனைப் பார்த்து திரௌபதியும் மெல்ல சிரித்தாள். ‘‘யாதவனே, ஒரு சாரதி மட்டும் இருந்தால், ஒரு சாரதி மட்டும் இருந்தால்என் வீரத்தை இந்த உலகம் பார்க்கும். சாரதி இல்லாது ஒருவன் யுத்த களத்தில் எதுவும் செய்ய முடியாது. ஒரு மோசமான சாரதி தவறான இடத்திற்கு அழைத்துப் போய்விடுவான்.

ஒரு நல்ல சாரதிதான் எப்பொழுது இடைவெளி விடவேண்டும் என்றோ, எப்பொழுது நெருங்க வேண்டுமென்றோ தெரிந்து கொள்வான். என் சாரதி செத்துப் போய்விட்டான். இல்லையெனில் நான் இந்நேரம் கோட்டை வாசலை தாண்டியிருப்பேன். சே... ஒரு சாரதி....’’ என்று அதிகப்படியாக நடிக்கத் துவங்கினான். பிருங்களை என்கிற அர்ஜுனன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். சேலையை சரிசெய்து கொண்டான். விரல்களால் யாரும் அறியாமல் சமிஞ்ஞை செய்து திரௌபதியை அருகே வரவழைத்தான்.

எல்லோருக்கும் குடிப்பதற்கு நீர் கொடுப்பது போல சைந்தரியான திரௌபதி மெல்ல அர்ஜுனனிடம் வந்தாள். ‘பிருங்களை நல்ல சாரதி, அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியவள் என்று சொல். நம்பி போருக்கு இறங்கலாம், நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்’ என்று மெல்லிய குரலில் சொல்ல, சைந்தரியான திரௌபதி உத்தரனுக்கு அருகே போனாள். அவள் மாலினி என்று அறியப்பட்டிருந்தாள்.

‘‘என்ன வேண்டும் மாலினி?’’ மிக கம்பீரமாக உத்தரன் விசாரித்தான். ‘‘உங்களுக்கு நல்ல தேரோட்டி கிடைத்து விட்டார்.’’ ‘‘அப்படியா, யாரது?’’ ‘‘பிருங்களை’’ ‘‘பிருங்களையா, நடனம் அல்லவா சொல்லிகொடுக்கிறாள்’’ ‘‘இல்லை. அவர் அர்ஜுனனின் தேரோட்டி. பல யுத்தங்களுக்கு அர்ஜுனனுக்கு தேரோட்டியிருக்கிறார். அர்ஜுனன் வனவாசம் போனதால் எங்கு போவது என்றுத் தெரியாமல் இங்கு வந்து பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தையல் வேலையும், பூவேலையும் செய்து கொண்டிருக்கிறார்.

உண்மையில் அவர் பல போர் களம் கண்டவர்’’ ‘‘நான் நினைத்தேன்.’’ உத்தரன் தொடை தட்டினான். எதுவும் கேட்டபிறகு நான் நினைத்தேன் என்று சொல்வது தந்திரசாலிகளின் வழக்கம். பேச்சை நீட்டி முழக்குகிறவர்கள் தங்களை புத்திசாலிகளாக காட்டிக் கொள்ள சொல்லுகின்ற வசனம் அது. ‘இந்த உயரம், இந்த அகலம் ஒரு பெண்ணுக்கும் இருக்காதே. எப்படி பெண் தன்மை’ என்று யோசித்தான்.

அது வலிந்து பெற்ற பெண்மையாகத்தான் இருக்கிறது. உண்மையில் அது ஆணின் உடம்பு. பிருங்களையை வரச்சொல் என்று கட்டளையிட்டான். பிருங்களை என்ற அர்ஜுனன் நாணி கோணிக் கொண்டு ஒரு பெண்ணைப் போல உத்தரன் எதிரே வந்து நின்றான். பயந்தவன் போல் நடித்தான். கலவரமானவன்போல் கால் தடுமாறினான்.

பெண்கள் சிரித்தார்கள். இத்தனை உயரம், ஆனால், எத்தனை பயம் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ‘‘அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா? நீ சாரதியா’’ என்று கேட்ட உத்தரன், தொடர்ந்து, ‘‘நான் யார் என்று உனக்குத் தெரியாது. என்னுடைய வீரம் சொற்களுக்கு அப்பால் உள்ளது. அர்ஜுனன் போர் செய்வதை பார்த்திருப்பாய். இந்த உத்தரன் அர்ஜுனனுக்கு இணையாக ஏன் அவனைவிட திறமையாக இந்த கௌரவர்களோடு போரிடுவதை நீ பார்க்கப் போகிறாய்,’’ என்றான்.

அர்ஜுனன் திகைத்தான். அங்கிருந்தபடி திரௌபதியைப் பார்த்தான். திரௌபதி வாயை பொத்திக் கொண்டு அடக்க முடியாத சிரிப்போடு முகம் திருப்பிக் கொண்டாள். ‘‘நீ தேர் ஓட்டிய அர்ஜுனன் ஒரு மகா வீரன். பஞ்ச பாண்டவர்களில் ஒருவன். அவன் வனவாசம் போனது எனக்கு துக்கம் அளிக்கிறது. அந்த துக்கம் உனக்கும் இருக்கும். ஆனால். கவலைப்படாதே. இதோ உனக்கு இன்னொரு அர்ஜுனன் கிடைத்து விட்டான்’’ என்று சொல்ல, அவன் கர்வத்தை விட அந்த இளவரசன் தன் மேல் கொண்டிருந்த அன்பையும், பஞ்சபாண்டவர்கள் மீது கொண்டிருந்த பிரேமையையும் பார்த்து அர்ஜுனன் உத்தரனை நோக்கி கை கூப்பினான். திரௌபதி கண் கலங்கினாள்.

‘‘எப்பேர்பட்ட வீரன். எவ்வளவு பெரிய வீரர்களையெல்லாம் கதற அடித்தவன். இடையறாது போர் செய்ய வல்லவன். தேவர்களும் அஞ்சி நடுங்குகின்ற போர் வீரன். பல அஸ்திரங்களுக்கு சொந்தக்காரன். துரோணாச்சாரியாரின் தலைமைச் சீடன். கிருஷ்ணனின் மிக நெருங்கிய நண்பன். பல பெண்களை நேசித்தவன். பல பெண்கள் நேசிக்க காரணமாக இருந்தவன். அப்பேர்பட்ட வீரனை, ஆண் அழகனை, சௌந்தர்யமான சொரூபனை ஒரு பெண் போல சபையில் நிற்க வைத்து ‘‘ஹே கிருஷ்ணா, இது என்ன விளையாட்டு.

அவன் எதிரே இன்னொருவன் தன்னை அர்ஜுனன் என்று சொல்லிக் கொள்கிறானே, இதைக் கேட்டு அவர் என்னைப் பார்க்கிறாரே, எத்தனை மோசமான விளையாட்டு. கிருஷ்ணா, இன்னும் எத்தனை நாள். என்னவெல்லாம் இவர்கள் அனுபவிக்க வேண்டுமோ அத்தனை அவமானங்களையும், வேதனைகளையும் இவர்கள் அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேலும் தொந்தரவு செய்வாயா. கிருஷ்ணா காப்பாற்று. கிருஷ்ணா காப்பாற்று.’’ அவள் உள்ளுக்குள்ளே கை கூப்பி கெஞ்சினாள்.

நல்லவர்களுக்கு சோதனை வரும். காப்பாற்ற கடவுள் துணையும் வரும். இதுதான் அவர்கள் வாழ்க்கையின் முழு அர்த்தம். வேதனையும், சோதனையும் அற்று இருப்பவன் வெறும் உலர் மரம். தருமரின் வழிகாட்டலால், வளர்ப்பால் அர்ஜுனன் இந்த வேதனையை மிக அழகாக எடுத்துக் கொண்டான். அவ்வப்போது உள்ளே வருத்தம் தோன்றினாலும் பிற்பாடு மிக நல்ல நலன்கள் வருவதற்கு இது காரணம் என்று புரிந்து கொண்டான்.

இது தன்னுடைய வேலை அல்ல. கிருஷ்ணனுடைய லீலை. தான் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தன்னை கிருஷ்ணர் கோபமூட்டிக் கொண்டிருக்கிறார். தனக்கு ரௌத்ரம் வருவதற்காக சில வேதனைகளை சொல்லியிருக்கிறார். கௌரவர்களின் அழிவுதான் முக்கியம். அது மனித குலத்திற்கு உண்டான நிவாரணம். க்ஷத்திரியர்களை, க்ஷத்திரியர்களை வைத்தே வேரருக்கின்ற வித்தை. இதை பரம்பொருளின் அம்சமான கிருஷ்ணர் பூமிக்கு வந்து செய்யத் துவங்கி விட்டார். இதைத்தான் பலமுறை யுதிஷ்டர் மிக சூசகமாகச் சொல்கிறார். அந்த பரம்பொருளான கிருஷ்ணர் அருகில் இருக்கும்பொழுது மனம் வேறு நிலைக்குப் போய் விடுகிறது.

இன்னும் என்ன செய்ய வேண்டும் சொல். இன்னும் எவ்வளவு தாழ வேண்டும் சொல். அத்தனையும் செய்கிறேன். இதற்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதென்று நீ நினைக்கிறாய் அல்லவா, அது போதும். இப்படி இருப்பதற்கு நீ சாட்சியல்லவா, அது போதும். இப்படி இரேன் என்று நீ சொன்னாயல்லவா, அது போதும். நான் ஆண். பெண்களை காதலிக்கிறவன். மிகவும் விரும்புகிறவன். அங்கம் அங்கமாய் ரசிக்கிறவன். ஆனால், அந்தப் பெண்களை அறிவாயா. அந்தப் பெண் யாரென்று உனக்குத் தெரியுமா.

அவள் நடப்பதும், நிற்பதும், பின்னலிடுவதும், நெற்றிக்கு இடுவதும், உதட்டுச் சாயமும், உறங்குவதும், விழிப்பதும் எப்படி என்பதை தெரிந்து கொள்ளேன். பெண்களோடு நெருங்கிப் பழகினால்தானே, பெண்களோடு பெண்களாய் இருந்தால்தானே உனக்கு பெண்களைப் பற்றி புரியும் என்று எனக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. அப்பொழுது என்னுடைய பெண் மோகம் ஒரு விவேகத்திற்கு வருமல்லவா. ஒரு விவரம் இருக்குமல்லவா என்றும் அர்ஜுனனுக்குப் புரிந்தது. அவன் அமைதியாக நின்றிருந்தான். ‘‘எங்கே உன்னுடைய கைகளை காட்டு. அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியிருக்கிறாயே’’ என்று சொல்ல, பிருங்களை தன் கைகளை காண்பித்தாள்.

அலங்காரமாய் இட்டுக் கொண்ட சாயங்களுக்கு நடுவே தடித்து காய்ப்புகள் காய்த்த இடங்கள் தெரிந்தன. கட்டை விரலுக்கு நேர் பக்கம் கடிவாளத்தை இழுத்து இழுத்து பெருத்த தடிமன் உண்டாகியிருந்தது. விரல்கள் எல்லாவற்றிலும் தழும்பு இருந்தது. முன் கை வரையில் வெட்டுத் தழும்பும், அம்பு குத்திய தழும்பும், கவசம் அழுந்திய தழும்பும், கையால் கதையை தடுத்த தழும்பும் இருந்தன. இது போர் செய்த உடம்பு. உத்தரனுக்கு புரிந்து போயிற்று. தன்னைவிட இரண்டு பிடி உயரமாக இருக்கின்ற அர்ஜுனன் தோள்மீது கைவைத்தான்.

ஆயினும் நான் அரசகுமாரன் தானே என்ற அலட்டலில் பேசத் துவங்கினான். ‘‘அர்ஜுனனுக்கு தேரோட்டி என்பதால் நான் உன்னை என் தேரோட்டியாக வைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். என் திறமையை நீ நேரில் காணப் போகிறாய். யாரங்கே? இவனுக்கு கவசம் கொடுங்கள்’’ என்றுச் சொல்ல, அவனுக்கு கவசம் கொடுக்கப்பட்டது.

தூரத்தில் இருந்த திரௌபதியை குறும்போடு அர்ஜுனன் பார்த்தான். திரௌபதி கண்ணால் என்ன என்று வினவினாள். கவசத்தை எப்படி போட்டுக் கொள்வது என்றுத் தெரியாமல் தலைகீழாகவும், நேராகவும், பிறகு முதுகு பக்கமும் மாட்டிக் கொண்டான். பெண்கள் வாய் விட்டு சிரித்தார்கள். உத்தரன் பெரிதாக நகைத்தான். அவனிடமிருந்து கவசத்தை பிடுங்கி மார்பில் வைத்து அவனே முதுகில் கட்டினான். தானும் கவசம் அணிந்து கொண்டான். ‘‘போ, போய் நல்ல தேராக எடுத்துக் கொண்டு வா. நல்ல குதிரைகளில் பூட்டு. அவற்றை உன் வசப்படுத்து’’ என்று சொல்லி பிருங்களையை அனுப்பி வைத்தான்.

பிருங்களை மெல்ல நடந்து பின்னடங்கி பிறகு துள்ளிக் கொண்டு நடக்க, பெண் என்கிற தன்மை மெல்ல மெல்ல உதிர்ந்து ஆண் என்ற ஓட்டம் வந்தது. அர்ஜுனன் குதிரை லாயம் நோக்கி ஓடுவதை கண்கொட்டாமல் திரௌபதி பார்த்துக் கொண்டிருந்தாள். பெண் தன்மை இழந்து ஆண் தன்மைக்குத் தாவிய அந்தப் புருஷனை காதலுடன் நோக்கினாள். ‘கிருஷ்ணா, இந்த பாட்டிலிருந்தும், நடனத்திலிருந்தும், தையல் வேலையிலிருந்தும், பூ தொடுப்பதிலிருந்தும் அவரை விடுவித்து போருக்கு அனுப்பியிருக்கிறாய். அவருடைய இயல்புக்கு திருப்பியிருக்கிறாய். உனக்கு வந்தனம். உனக்கு வந்தனம்’ என்று கிருஷ்ணனின் காலை தழுவி கண்களில் ஒற்றிக் கொண்டாள். மானசீகமாய் நமஸ்கரித்தாள்.

கோட்டையை விட்டு தேர் வெளியே போயிற்று. அர்ஜுனன் வேகத்திற்கு உத்தரனால் நிற்க முடியவில்லை. கொஞ்சம் மெல்ல ஓட்டு என்று எரிச்சலில் கத்தினான். ‘‘போர்களம் நோக்கிப் போகிறோம். நம் பசுக்கள் களவாடப்படுகின்றன. எப்படி மெல்ல போக முடியும். நாம் வீதி உலா போகவில்லை’’ என்று சொல்லி, இன்னும் விரட்டினான். வேறு வழியில்லாமல் தேரின் தூணை உத்தரன் இறுக கட்டிக் கொண்டான். அவன் வில் அவன் ஆசனத்தில் சாய்க்கப்பட்டிருந்தது. தொலைவில் பசுக்கூட்டம் தெரிந்தது. பசுக்கூட்டம் முன்னே கர்ணன் போக, பின்னே துரியோதனன் போக, இடதும், வலதும் பீஷ்மரும், துரோணரும் போக, அதற்குப் பின்னே துரியோதனனின் பெரும்படை வளைந்து அரைச் சந்திரன் ரூபத்தில் பசுக்களுக்கு காவலாக போயிற்று. முன்னேபோய் தடுத்து நிறுத்த வேண்டும்.

வேகமாக தேரை செலுத்தி அந்தக் கூட்டத்தை வேறு வழியில் தாண்டி முன்னே போய் நிறுத்தினான். பசுக்கூட்டம் நின்றது. கர்ணனும், துரியோதனனும் நின்றார்கள். தேரின் தூணைக் கட்டியிருந்த உத்தரன் அதை விடவேயில்லை. ‘‘தவறு செய்து விட்டேன் பிருங்களை. அங்கே பெண்களுக்கு நடுவே வீராவேசமாக பேசி விட்டேன். உண்மையில் இந்தப் படையை என் ஒருவனால் எப்படி சமாளிக்க முடியும். போர் வீரர்கள் யாருமே இல்லை.

மொத்த படையும் என் தகப்பனார் அழைத்துக் கொண்டு போய் விட்டார். கோட்டைக்கு காவல்கூட இல்லை. பெண்கள்தான் வாளை இடுப்பில் வைத்துக் கொண்டு வாசற்கதவை திறந்து மூடுகிறார்கள். என்னை அரியணையில் உட்கார வைத்துவிட்டு போய் விட்டார். நான் வெறும் அலங்காரத்திற்கு உட்கார்ந்திருக்கிறேனே தவிர, நான் ஒன்றும் பெரிய போர் வீரன் இல்லை. பீஷ்மரையும், துரோணரையும், கர்ணனையும் எதிர்க்கின்ற அளவுக்கு எனக்கு வலிவு இல்லவே இல்லை.

தேரை திருப்பு. போகலாம். என்னால் இந்த யுத்தத்திற்கு வர முடியாது. பசுக்கள்தானே. அறுபத்திநாலாயிரம் தானே. போனால் போகட்டும். மற்றபடிக்கு ஏதேனும் செய்து கொள்ளலாம். துரியோதனாதிகளை எதிர்ப்பது கடினம். நான் போருக்கு போக மாட்டேன்’’ என்று சொல்லி, அழுந்த அமர்ந்து கொண்டான். வில் காலின் கீழ் இருந்தது.

பாலகுமாரன்

(தொடரும்)

Tags :
× RELATED சுக்ரீஸ்வரர் கோயில்