ஸகஸ்ராராம்புஜாரூடா – ஸுதாஸாராபி வர்ஷிணீ
நாம் இதற்கு முன்னாலுள்ள நாமங்களில் யோக மார்க்கமான விஷயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். குண்டலிணீ விஷயமாக மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரையிலான விஷயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். அதற்கு இடையே இருக்கக் கூடிய பிரம்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி என்று அதைப்பற்றிய விஷயங்களையெல்லாம் பார்த்தோம். இந்த பிரம்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி என்று இந்த மூன்றையும் கடந்து அம்பாள் குண்டலிணீ சொரூபிணீயாக சஹஸ்ராரத்தைக் நோக்கி செல்கிறாள். அப்படி செல்லும்போது அந்த சாதகனின் நிலையை எப்படி உயர்த்துகிறாள் என்றும் பார்த்தோம்.
இப்போது ஸகஸ்ராராம் புஜா ரூடா என்கிற நாமத்தை இப்போது பார்க்கப் போகிறோம்.
ஸஹஸ்ரார அம்புஜ ரூடா ஸஹஸ்ராரம் என்பது யோகியினுடைய தலையிலுள்ள ஏழாவது சக்கரம். அம்புஜம் என்றால் தாமரை. ஸஹஸ்ராராம் அம்புஜா என்றால், இந்த யோகியினுடைய ஏழாவது ஸ்தானமானது, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகும். இந்த ஆயிரம் இதழ்கள் தாமரையின் மீது வீற்றிருக்கக் கூடியவள். ஆரூடம் என்றால் ஏறி இருப்பவள். வீற்றிருப்பவள் என்று பொருள். சிம்மாரூடா என்றால் சிம்மத்தின் மீது ஏறியிருப்பவள். கஜாரூடா என்றால் கஜத்தின் மீது ஏறியிருப்பவள். அதுபோன்று சஹஸ்ராராம்புஜாரூடா என்றால், சஹஸ்ராரமாகிய ஆயிரம் இதழ் தாமரையின் மீது ஏறி இருப்பவள். வீற்றிருப்பவள் என்று அர்த்தம்.
அப்போது இந்த சஹஸ்ராராம்புஜாரூடா என்பவள் யார்?
எந்த அம்பிகை நமக்குள் குண்டலிணீயாக இருக்கிறாளோ, அவள் மூலாதாரத்திற்குள் அடங்கியிருந்தாள் அல்லவா? அந்த சைதன்யம் நமக்கு வெளியில் தெரியாமல் இருந்தது. அப்படி ஒடுங்கியிருந்த சைதன்யம் இந்த சாதனை மூலமாக, அந்த சைதன்யம் மேல்நோக்கி எழும்புகிறது. இந்த சாதகனுடைய தேகாபிமானம், தேகாத்மபுத்தி போகிறது. அதுதான் பிரம்ம க்ரந்தி விபேதனம், அதற்கடுத்து பிராணாபிமானம் போகிறது. அதுதான் விஷ்ணு க்ரந்தி விபேதனம். அதற்கடுத்து மனோ அபிமானம் போகிறது. அதுதான் ருத்ர க்ரந்தி விபேதனம். இந்த தேகம், பிராணன், மனசு இந்த ப்ரம்ம கிரந்தி, விஷ்ணு க்ரந்தி கடந்ததற்கு பின்னால், அந்த குண்டலிணீயாக இருக்கக் கூடிய அம்பாள், சிவ சொரூபமாக இருக்கக்கூடிய சஹஸ்ராரத்தை, அம்பிகையான சக்தி அடைகிறாள். இந்த சாதகனுடைய சஹஸ்ராரத்தில் சிவம் இருக்கிறது. மூலாதாரத்தில் குண்டலிணீ சொரூபமாக சக்தி இருந்தது. இப்போ குண்டலிணீ சொரூபமாக இருந்த சக்தி, சஹஸ்ராரத்தில் இருக்கக் கூடிய சிவத்தைபோய் அடைகிறது. அப்படி அடையும்போது அந்த குண்டலிணீக்கு இருக்கக் கூடிய பெயர்தான், சஹஸ்ராராம் புஜா ரூடா என்பதாகும். சஹஸ்ரார தாமரையில் வீற்றிருப்பவள் என்று பெயர்.
அப்படி சகஸ்ராரத்தை அடையும்போது என்ன நடக்கிறது. அங்கு சிவசக்தி ஐக்கிய சொரூபம் வெளிப்படுகிறது. நாம் லலிதா, ஸ்ரீவித்யா என்று சொன்னாலே அங்கு சிவசக்தி ஐக்கிய சொரூபத்தைத்தான் பார்த்திருக்கிறோம். சிவசக்தி ஐக்கிய சொரூபம் என்பது என்ன என்றால், ஞானமும் காருண்யமும் எங்கு சேர்ந்திருக்கிறதோ அதுதான் சிவசக்தி ஐக்கிய சொரூபம். இந்த ஜீவனும் பிரம்மாவும் வேறில்லை என்று தெரிந்து கொள்வதுதான் சிவசக்தி ஐக்கியம். ஜீவன் வேறு, பிரம்மம் வேறு இல்லை என்றும்… ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்று தெரிந்து கொள்கின்ற ஏகத்துவ பாவம்தான் சிவசக்தி ஐக்கியம். இந்த ஜீவ பிரம்ம ஐக்கியம் இந்த ஜீவனுக்கு எங்கு நடக்கிறதெனில், சஹஸ்ரார பத்மத்தில் நடக்கிறது.
அப்படி சஹஸ்ரார பத்மத்தில் நடக்கும்போது, ஸுதாஸாராபி வர்ஷிணீ என்று அம்ருதத்தை சாதகன் மீது பிரவாகமாகப் பொழிகிறாள். அம்ருதத்தை இந்த சாதகன் மீது, இந்த யோகியின் மீது உபாசகன் மீது அம்ருதத்தை பொழிகிறாள். அப்படி பொழிவதற்குப் பெயர்தான் ஸுதாஸாராபி வர்ஷிணீ. ஸுதா என்றால் அம்ருதம். ஸார அபி வர்ஷிணீ. ஸுதா ஸாரம் என்றால் அம்ருதத்தினுடைய ஸாரம். எது இருப்பதிலேயே ஸாரமான விஷயமோ, அந்த ஸுதா ஸாரம் என்கிற அம்ருத ஸாரத்தை அம்ருதப் பிரவாஹத்தை அபி வர்ஷ்ணீ. நம் மீது அப்படியே அபி வர்ஷணம் செய்கிறாள். நம் மீது அப்படியே பொழிகிறாள். அதனால், அம்பிகைக்கு ஸுதாஸாராபி வர்ஷிணீ என்று பெயர்.
சஹஸ்ரார பத்மத்தின் மீது, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மீது இருப்பதால் சஹஸ்ராராம் புஜாரூடா. சஹஸ்ராராம் புஜாரூடா என்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மீது இருந்து கொண்டு என்ன செய்கிறாள். அம்ருதத்தை நம்மீது பொழிவதால், ஸுதாஸாராபி வர்ஷிணீ என்று அழைக்கப்படுகிறாள்.
இப்படி இவன் மீது அம்ருதம் பிரவாஹம் ஆகின்றது. இது நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும். இதனுடைய அந்தர்முகமான உள்ளர்த்தம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆயிரம் இதழ் தாமரை என்றாலே கணக்கற்றது என்று அர்த்தம். ஆயிரம் இதழ்கள் என்றாலே, beyond numerical terms. Innumerable, indefinite. இந்த பிரம்ம நிலையை அடையும்போது அவன் எல்லைகளற்று வியாபிக்கிறான் என்று அர்த்தம். இந்த நிலையில் அவன் பன்மடங்கு பெருகி விடுகின்றது. இவன் அதுவரை சிறியதொரு ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். சிறிய அறிவை அனுபவித்துக் கொண்டிருந்தான். சிறியதொரு மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையுமே சின்னச் சின்னதாக அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆனால், இந்த நிலையில் அவன் அனுபவிப்பது எல்லாமே எல்லைகளுக்கெல்லாம் உட்படாத ஆனந்தம். அந்த அறிவு கூட limitless ஆக இருக்கும். அந்த ஆனந்தம் சாதாரணமாக இருக்காது. பிரம்மானந்தம். பேரானந்தம். அங்கு எல்லாமே விரிந்து ஆயிரக்கணக்காக மாறி விடுகின்றது. இதைத்தான் சஹஸ்ராராம் புஜா ரூடா என்கிறது.
இதற்குப் பிறகு, எது நம்மை இவ்வளவு காலங்களாக ஒரு தளைக்குள் கட்டி வைத்திருந்தது (limit) என்று பார்த்தால், இந்த தேகத்தோடு சம்மந்தப் படுத்தி வைத்திருந்தான். அதற்கு ஒரு தோற்றம் இருக்கிறது. ஒரு மறைவு இருக்கிறது. ஒரு ஆரம்பம் இருக்கிறது. ஒரு முடிவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தான். பிறப்பு – இறப்பு என்கிற சுழற்சிக்குள் இவன் சுருக்கிக் கொள்கிறான். இப்போது இந்த limitations ஐ கடந்து செல்லும்போது, இந்த சுழற்சியிலிருந்து வெளியேறி விடுகிறான்.
அப்போது அவனுக்கு ஒரு உண்மை தெரிகிறது. அது என்னவெனில், இனி இறப்பு கிடையாது என்கிற உண்மை தெரிய வருகிறது. இனி பிறப்பும் கிடையாது என்று தெரிய வருகிறது. எங்கு முடிவு இல்லையோ, அங்கு ஆரம்பமும் இருக்க முடியாது. So he has no end; no begining.
இப்போது அவன் அடையக் கூடிய நிலை என்னவெனில், அம்ருதத்வம் என்கிற நிலை. ம்ருதம் என்றால் மரணம். ம்ருதம் என்றால் limitation. ம்ருதம் என்றால் beginning and end. ம்ருதம் என்றால் birth and death. இப்போது ம்ருதம் என்று சொல்லக் கூடிய இந்த குறுகிய வட்டத்திலிருந்து, அம்ருதம் என்கிற இடத்திற்கு போய் விடுகின்றான். அதனால்தான் அம்பிகை அங்கு அம்ருதத்தை வர்ஷிக்கிறாள். He has gone beyond all limitations. அதனால்தான் வேதம் சொல்கிறது, ம்ருத்யோமா அம்ருதம் கமய… என்னை அழிவிலிருந்து அழிவற்ற நிலைக்கு அழைத்துச் செல்வாய். அங்கு அழிவற்ற நிலையை அம்பாள் பிரசாதிக்கிறாள். அப்படி பிரசாதிக்கும்போது அம்பாள் எப்படியிருக்கிறாளெனில், ஸுதா ஸாராபி வரிஷ்ணி. அப்போது என்ன நடக்கிறதெனில், இவன் இந்த தேகத்தில் இருந்தாலும், இந்த தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்று தெரிந்து விடுகிறது. இவன் இந்த மனசுக்குள் இருந்தாலும் இந்த மனசுக்கு அப்பாற்பட்டவன் என்று தெரிந்து விடுகின்றது. இவன் இந்த பிராணனுக்குள் இருந்தாலும், பிராணனுக்கு அப்பாற்பட்டவன் என்று தெரிந்து விடுகிறது. இந்த தேகத்தினுடைய தொடர்பு கொண்டுள்ள இந்த ஐந்து இந்திரியங்களாகட்டும் , மனசாகட்டும், பிராணனாகட்டும், இவனுடைய எண்ணங்களாகட்டும், இவனுடைய சொல்லாகட்டும், இவனுடைய செயல் ஆகட்டும் எல்லாமே அங்கு அமிர்த மயமாக மாறிவிட்டது. அமிர்த மயமாக மாறக்கூடிய நிலையை அம்பாள் அங்கு கொடுக்கிறாள். The eternal sweetness. இந்த sweetness க்கு end கிடையாது. இந்த மதுரத்திற்கு இணையே கிடையாது. இந்த eternal sweetness தான் ஸுதாஸாராபி வர்ஷிணீ.
இந்த நாமாக்களுக்கு உரிய கோயிலை பார்ப்போமா!
பொதுவாக நம்முடைய ஆக்ஞா சக்கரம், பிரம்மரந்திர பகுதி, அதற்கு மேலே இருக்கக் கூடிய சஹஸ்ராரம். இந்த மூன்றையும் இணைக்கக் கூடிய ஒரு க்ஷேத்ரம் நம்முடைய தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த க்ஷேத்ரமே திருவையாறு. அதனால் இந்த நாமாக்களுக்கு இதையே க்ஷேத்ரமாகச் சொல்லலாம்.
இன்னொரு காரணம், அங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினியாக இருக்கிறாள். சுவாமி, ஐயாறப்பராக யோகீஸ்வரராக இருக்கிறார். ஏனெனில், இன்றும் ஐயாறப்பர் சந்நதியிலுள்ள லிங்கத்தின் பின் பகுதியான கருவறை கோஷ்டத்தை பிரதட்சணம் செய்ய முடியாது. ஏனெனில், சுவாமியினுடைய ஜடாபாரம் பின் பக்கம் முழுவதும் நீண்டு இருப்பதால், சுவாமியே ஒரு யோகீஸ்வரராக இருக்கிறார். இன்னொரு விஷயம் ஒரு யோகியின் ஜடாபாரம் என்பது சஹஸ்ராரத்தைக் குறிக்கும். எனவே, ஐயாறப்பர் இங்கு பரம யோகீஸ்வரராக காட்சி கொடுக்கிறார்.
திருவையாறு என்பது ஐந்து தீர்த்தங்களை குறிக்கும். அதுபோல ஒரு யோகியினுடைய பஞ்சேந்திரியங்களும் அமிர்தமயமாக மாறிவிடும். இந்த பஞ்சேந்திரியங்களுமே ஐந்து தீர்த்தங்களாக மாறி விடும். அப்போது யோகியினுடைய சரீரமே திருவையாறாக மாறிவிடுகிறது. அவனுடைய குண்டலிணீ சக்தியே அங்கு தர்ம சம்வர்த்தினியாக இருக்கிறது. அவனுடைய ஆத்மாதான் அங்கு பஞ்சநதீஸ்வரராக இருக்கிறார். ஐயாறப்பர் என்பதற்கு சமஸ்கிருதத்தில் பஞ்சநதீஸ்வரர் என்று பெயர்.
(சுழலும்…)
