×

நன்மையின் பக்கம் அழைத்தல்

‘பாங்கு’ எனப்படும் தொழுகைக்கான அழைப்பில் பின்வரும் வரிகள் காணப்படும்.

“ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ்”

இதன் பொருள்: ‘தொழுகையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்.’

தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளின் பக்கம் மக்களை அழைப்பது மிகச் சிறந்த புண்ணிய செயலாகும். அப்படி அழைத்தவர், அந்த அழைப்பை ஏற்று வழிபாடுகளை நிறைவேற்றுபவர் ஆகிய இருவருக்குமே நன்மைகள் கிடைக்கும். யாருடைய நன்மையும் துளியும் குறைக்கப்படாது.

“பசிப்பிணியைப் போக்குங்கள்” என்று மார்க்கம் கட்டளையிடுகிறது. அன்னதானம் மிகப் புண்ணியமானது.

ஒருவரிடம் பணவசதி இல்லை. அன்னதானம் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பொருள் வளம் இல்லை. ஆனால், நல்ல அருள் மனம் இருக்கிறது. தமக்குத் தெரிந்த பணக்காரர் ஒருவரிடம் ஏழைகளுக்கு உணவளிக்கும்படித் தூண்டுகிறார். உற்சாகப்படுத்துகிறார். அந்தப் பணக்காரரும் இவர் சொல்படியே ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.

இப்போது அந்தப் புண்ணியம் யாருக்குச் சேரும்? பொருளைச் செலவு செய்த பணக்காரருக்கா? அவரை நற்செயலுக்குத் தூண்டிய ஏழைக்கா?

இருவருக்கும் சம அளவில் புண்ணியம் கிடைக்கும். அன்னதானம் செய்து வறியவரின் பசியைப் போக்கிய அந்த வள்ளலுக்கு எந்த அளவுக்குப் புண்ணியம் கிடைக்குமோ அதற்குச் சற்றும் குறையாமல் அவரை அந்த நற்செயலுக்குத் தூண்டியவருக்கும் கிடைக்கும்.

மக்களைத் தீயவழிக்கு அழைப்பவர்களின் நிலையும் இதுவேதான். சான்றாக, “தீய பழக்கத்திற்கு” என்று ஒரு நண்பன் அழைக்கிறான் என வைத்துக் கொள்வோம்.

நண்பனின் அழைப்பை ஏற்று இவனும் வழிதவறிச் செல்கிறான் எனில், இருவருமே பாவத்தில் சமபங்கு பெறுவார்கள்.

இறைவனின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த உண்மையை ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்கள்.

“மக்களை நல்வழிக்கு அழைத்தவருக்கு அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றவை உண்டு. அது பின்தொடர்ந்தவர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றவை உண்டு. அது பின்தொடர்ந்தவர்களின் பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.” (ஆதாரம்- குதுபித்திஸ் ஸஆ, நபிமொழி எண்-7)

நற்செயல்களில் மிகுதியாக ஈடுபடுங்கள், பிறரையும் நற்செயல்களின் பக்கம் தூண்டுங்கள் என்ற இந்த நபிமொழி ஆர்வமூட்டுகிறது. அதேபோல், பாவங்களின் பாதையில் செல்லாதீர்கள், பிறரையும் செல்லத் தூண்டாதீர்கள் என்றும் எச்சரிக்கிறது. நன்மைகளைச் செய்து இம்மையிலும் மறுமையிலும் நல்லருளைப் பெறுவோம்.

– சிராஜுல் ஹஸன்

Tags : Hayya Alas Salah ,Alal ,
× RELATED திருநெல்வேலி, உலகம்மை உடனுறை பாபநாச நாதர்