×

ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டிய விவகாரத்தின் இலை பின்னணியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வேதனைய பாட்டா பாடிவிட்டு விமானத்துல பறந்துட்டாராமே மாஜி எம்பி’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கதர் கட்சியில தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் இருக்காங்க. அவர்களுக்குள் குரூப் பாலிடிக்சும் அதிகமாக இருப்பது ஊரறிந்த கதை. இது போன்ற குரூப் பாலிடிக்சால் பாதிக்கப்பட்ட மாங்கனி மாவட்ட மாஜி எம்பி ஒருத்தரு, தலைமைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விமானம் ஏறி வெளிநாடு பறந்தது சர்ச்சையை கிளப்பி இருக்காம். அவரோட பாதர், பெருந்தலைவரோடு நெருக்கமாக இருந்தவராம். கட்சிக்கு ரொம்பவும் விசுவாசமாக இருந்தவரு, ஒரு கட்டத்தில் சைக்கிளில் நின்னு ஜெயிச்சு எம்பி ஆனவரு. அப்புறம் கதர் கட்சிக்கே மீண்டும் வந்துட்டாரு. ஆனால் 22 வருஷமாக அவரை கட்சி தலைமை கண்டுக்கவே இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாடி தற்போதைய தலைவருக்கு மாஜி எம்பி, கடிதம் ஒன்றை எழுதினாராம். அதில் கட்சிக்கு யாருன்னே தெரியாதவர்கள் கூட மாநில பொறுப்புக்கு வாராங்க. வார்டு மெம்பரா ஆகமுடியாதவங்க கூட பொதுச்செயலாளரா ஆகுறாங்க. ஆனா என் தந்தை இந்த கட்சிக்கு செய்த தியாகம் என்னன்னு கூட தெரியாம இப்படியா என்னை புறக்கணிப்பீங்க என்று கொஸ்டீன் எழுப்பி இருக்காராம். அப்படியே வெளிநாட்டுக்கும் பறந்து போயிட்டாராம். திரும்பி வந்து நம்ம கட்சியில சேருவாரா, அல்லது மாற்றுக்கட்சிக்கு போவாரா என்று அவரது அடிப்பொடிகள் ஆவலோடு காத்திருக்காங்களாம்.’’சுய விளம்பரத்தில் கவுன்சிலர்கள் மும்முரமா இருக்காங்களாமே..எங்கேயாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபலத்தில நடந்து முடிந்தது. இதில் வெயிலூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இலை கட்சி, பூ கட்சி கவுன்சிலர்கள் கால்வாய் தூர்வாருதல், குப்பை அகற்றுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ததாக கூறி சமூக வலைதளத்தில் போட்டு சுய விளம்பரங்கள் செய்கின்றனராம். அன்றாடம் நடைபெறும் பணிகளை கூட தங்களது முயற்சியில் தான் நடந்ததாக கூறி இணையதளத்தில் பதிவு செய்கின்றனராம். வார்டுக்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கையில் ஈடுபடாமல் இப்படி கவுன்சிலர்கள் சுய விளம்பரம் தேடுகிறார்களே என்று வேதனையை வெளிப்படுத்துகின்றனர் பொதுமக்கள்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டிய விவகாரத்தின் பின்னணி என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்டத்தில் ஆசிரியர்களை மாணவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிய விவகாரம்  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே, பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு, மாணவர்களை நல்வழிப்படுத்தி வந்தனர். இந்த முறை இலைக்கட்சி ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. அதாவது, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இல்லாமல், இலைக்கட்சிக்கு வேண்டிய உள்ளூர் நிர்வாகிகளே, பெற்றோர் – ஆசிரியர் கழக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். இதனால் பள்ளிகளிலும் அரசியல் புகுந்தது. இதன்காரணமாக மாணவர்களின் ஒழுக்கத்தை கண்டுகொள்ளாமல், கவுரவத்தை மட்டுமே தொடர்ந்ததால் மாணவர்கள் வழி தவறக் காரணமாக இருப்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட அளவில் இலைக்கட்சியினரை கணக்கெடுத்து களையெடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறதாம். ஹனிபீ மாவட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுக்கவும் இந்த கணக்கெடுப்பும், களையெடுப்பும் நடக்க இருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமா… டிடிவி தினகரனை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை பிடிக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளாராம். இந்த முயற்சிக்கு அதிமுகவில் தான் எதிர்பார்த்த தென் மாவட்ட தலைவர்கள் யாரும் ஆதரவாக இல்லைன்னு வருத்தத்தில் இருக்கிறாராம். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அரசியலில் அதிகமாக இறங்கினர். பலர் கான்ட்ராக்ட் எடுத்து கோடீஸ்வரர்களாகவும் மாறிவிட்டனர். ஏறிய ஏணியை எட்டி உதைத்து விட்டனரே என்று சசிகலா புலம்பி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுவை விவகாரம் என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கூடி மக்கள் நலத்திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி கோப்புகளுக்கு முழு வடிவம் கொடுக்க சொன்னால் அந்த கோப்புகள் அனைத்தும் கிடப்பில் போடுகின்றனர் அதிகாரிகள். அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உத்தரவிட்டாலே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மதிப்பதில்லை. பாஜவுடன் கூட்டணி வைத்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அரசு அதிகாரிகளே அமைச்சர்களை மதிப்பதில்லை என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் கலெக்டர் உள்ளிட்ட பலர் மீது இக்குற்றச்சாட்டு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. விரைவில் மதிக்காத அதிகாரிகள் பட்டியலை டெல்லி தலைமைக்கு நேரில் கொண்டு செல்வோம் என பகிரங்கமாக சபாநாயகர் கூறியிருப்பது அரசியலில் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா….

The post ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டிய விவகாரத்தின் இலை பின்னணியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf ,Uncle ,Peter ,Qadar ,
× RELATED கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்!