×

கட்சியை உருவாக்கி 24 ஆண்டாக கட்டிக்காக்கும் சிங்கப் பெண் மம்தா: முதுகில் குத்துபவர்களை மூலையில் உட்கார வைக்கும் சாதுர்யம்

கொல்கத்தா: அரசியல் அசாதாரணமானது. கொஞ்சம் அசந்தாலும், காலில் விழும் நபர்கள், காலை வாரி விட்டு கட்சியை பிடித்த வரலாறுகள் நிறைய உண்டு. எதிர்த்து நிற்கும் எதிரிகளை விட, கட்சிக்குள் கூடவே இருக்கும் எதிரிகளை களை எடுப்பதும் ஒரு கலைதான். அந்த கலையில் கைதேர்ந்த அரசியல்வாதியாய், தைரியமான தலைவராய், தேசிய அரசியலில் சிங்கப் பெண்ணாய் திகழ்கிறார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி.திரிணாமுல் காங்கிரசை தொடங்கி கடந்த 24 ஆண்டுகால பயணத்தில், உட்கட்சியில் கிளர்ச்சி செய்தவர்களை, அதே வேகத்தில் அடக்கி, கட்சியை கட்டிக் காத்து வருகிறார். இந்த முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் திரிணாமுலிலும் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. ‘ஒரு நபர் ஒரு பதவி’ என்ற மம்தாவின் கொள்கைக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தனது ஆதரவாளர்களை கட்சியில் பலப்படுத்த முயற்சித்தார்.தனக்கு எதிராக தான் வளர்த்து விட்ட மருமகனே காய் நகர்த்துவதை உணர்ந்த மம்தா, கட்சியின் தேசிய அமைப்புகளை கலைத்தார். தனக்கு விசுவாசமான 20 பேர் கொண்ட புதிய செயற்குழுவை அமைத்தார். அதில், அபிஷேக் பானர்ஜியும் ஒருவர். அவரது ஆதரவாளர்கள் ஒருவர் கூட புதிய குழுவில் இல்லை. இந்த குழு, மம்தா தலைமையில் மீது முழு நம்பிக்கை வைப்பதாக உறுதி அளித்து கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மம்தாவை தேர்ந்தெடுத்தது. இதற்கான உறுதிமொழியில் அபிஷேக்கும் வேறு வழியில்லாமல் கையெழுத்திட்டார். மம்தாவின் அரசியல் பயணத்தை திரும்பி பார்த்தால், இதுபோன்ற பல உட்கட்சி கிளர்ச்சிகளை அவர் அதிரடியாக அடக்கியதை காண முடியும்.n 90களின் நடுப்பகுதியில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவும், மம்தாவும், கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் மித்ரா தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். 1998ல் திரிணாமுல் காங்கிரசை மம்தா உருவாக்கியதும், 10 ஆண்டுகள் கழித்து அதே மித்ரா, மம்தாவின் தலைமையை ஏற்று திரிணாமுலில் வந்து இணைந்தார். ஆனால், 2014ல் மீண்டும் அவர் காங்கிரசுக்கு சென்றார். அவர் இறக்கும் வரை மாநில காங்கிரஸ் தலைவராக மட்டுமே இருந்தார்.* 1998ல் கட்சியை உருவாக்கிய சிறிது காலத்திலேயே, நிறுவனத் தலைவர் பங்கஜ் பானர்ஜி மம்தா உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இது மம்தா சந்தித்த முதல் உட்கட்சி பிரச்னை.  பின்னர் பங்கஜ் மீண்டும் திரிணாமுலுக்கு வந்தாலும்  பெரிய அளவில் வளர முடியாமல் அரசியலுக்கே முழுக்கு போட்டார்.* 2011ல் மம்தா முதல்வரானதால், எம்பி தினேஷ் திரிவேதி ஒன்றிய ரயில்வே அமைச்சராக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் திரிவேதியின் முடிவு மம்தாவுக்கு பிடிக்கவில்லை, கோபமடைந்த மம்தா, திரிவேதிக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்கி, கட்டண உயர்வை திரும்பப் பெற்றார். * 2011 முதல் 2014 வரை கட்சியில் அதிகாரப்பூர்வமற்ற நம்பர் 2 ஆக இருந்த முகுல் ராய், பின்னர் கட்சியில் அபிஷேக்கின் திடீர் எழுச்சியைத் தொடர்ந்து 2017ல் பாஜவில் சேர்ந்தார். கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முகுல்ராய், திரிணாமுலுக்கு திரும்பினார்.இவ்வாறு, ‘‘எதிரிகள் சரணடையும்போது அவர்களை மம்தா மன்னித்தாலும் அவர்கள் செய்த துரோகங்களை மறப்பதில்லை. அவரை எதிர்த்த தலைவர்கள் அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் அல்லது மூலையில் அமர வைக்கப்படலாம்,” என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெயிட் பண்ணுங்க அபிஅதிகார மோதலை அடக்கி, கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள மம்தா, மருமகன் அபிஷேக்கிடம் கட்சி பொறுப்பை ஒப்படைக்க இன்னும் காலம் உள்ளது என்பதையும் மம்தா புரிய வைத்துள்ளார். மேலும் தன்னை எதிர்த்தவர்களை அடக்கியே பழக்கப்பட்ட மம்தா, அபிஷேக் தனது குடும்பத்தில் ஒருவர் என்பதால் அவருக்கான பின்விளைவுகள் வித்தியாசமாக இருக்கலாம் என்கின்றனர் கட்சியினர்….

The post கட்சியை உருவாக்கி 24 ஆண்டாக கட்டிக்காக்கும் சிங்கப் பெண் மம்தா: முதுகில் குத்துபவர்களை மூலையில் உட்கார வைக்கும் சாதுர்யம் appeared first on Dinakaran.

Tags : Mamta ,KOLKATA ,Mamata ,Dinakaran ,
× RELATED கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு...