×

தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் வெளியான விவகாரம் வக்கீல் வாஞ்சிநாதனிடம் சைபர் கிரைம் விசாரணை

மதுரை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இந்த புகார் மனு ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வாஞ்சிநாதன், மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் வாஞ்சிநாதனுக்கு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி, மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேற்று காலை 11 மணிக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், புகார் மனு தயாரித்தது, அனுப்பியது, புகார் வௌியானது குறித்து விசாரித்தனர். அவரது புகார் தொடர்பான ஆவணங்களை போலீசார் வாங்கி படித்துப் பார்த்து குறித்துக் கொண்டனர்.

* ‘பாஜ அவதூறு பதிவு என் உயிருக்கு அச்சம்’
வாஞ்சிநாதன் கூறுகையில், ‘‘நான் ரகசியமாக அனுப்பிய புகார் மனுவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக வழக்கு பதிய வேண்டும். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எனது உயிருக்கு அச்சம் இருக்கிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, இந்து அமைப்புகள் எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. விரைவில் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்’’ என்றார்.

The post தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் வெளியான விவகாரம் வக்கீல் வாஞ்சிநாதனிடம் சைபர் கிரைம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vanchinathan ,Chief Justice ,Madurai ,Supreme Court ,Madurai High Court ,Judge ,G.R. Swaminathan ,Court ,WhatsApp ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...