×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் பழங்குடியின நல அலுவலர் அதிரடி

கள்ளக்குறிச்சி, ஜூலை 30: கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பழங்குடியின நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட மணியார்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் தனபால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா மேற்பார்வையில் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் மணியார்பாளையத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

அதில் பள்ளி தலைமை ஆசிரியர் தனபால், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்ட அலுவலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் தனபாலை சஸ்பெண்ட் செய்து பழங்குடியின நல அலுவலர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பள்ளியில் மாணவிகளுக்கு வேறு ஆசிரியர்கள் யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் பழங்குடியின நல அலுவலர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai boarding school ,Welfare Officer ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு