வேலூர், டிச.22: வேலூர் அருகே நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அடுத்த அன்பூண்டி காவாக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி(44). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவகுமாருக்கும் கடந்த ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அடிக்கடி இருதரப்புக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுவந்துள்ளது. கடந்த 19ம் தேதி மீண்டும் இவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சிவகுமார் மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சேர்ந்து கற்களாலும், இரும்பு ராடாலும் பிச்சாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிச்சாண்டி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
