×

நெல்லையில் இரு பிரிவினர் மோதல்: பெண்கள் உள்பட 8 பேர் காயம்

நெல்லை, டிச.22: நெல்லையில் இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் காயமடைந்த பெண்கள் உள்பட 8 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை தச்சநல்லூர் அருகேயுள்ள ஊருடையார்புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இளைஞர்கள் சிலர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அந்த பெண்ணை இடித்துவிட்டு சென்றதாகவும், இதுகுறித்து கேள்வி கேட்டதால் அவர்கள் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கற்களை வீசி இரு பிரிவினரும் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் காயமடைந்த நம்பிராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் (31), ஊருடையார்புரத்தை சேர்ந்த பிரகாஷ் (25), தச்சநல்லூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த தமிழரசன் மனைவி மணிமேகலை (36), கதிரவன் (42), கணேசன் (50) ஆகியோரும் மற்றொரு தரப்பில் நயினார்குளம் நடுத்தெருவை சேர்ந்த சாமித்தாய் (75), பார்வதி (60), பேச்சியம்மாள் (65) உள்ளிட்ட 8 பேர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து ஊருடையார்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர்கள் தச்சநல்லூர் பத்மநாபன் பிள்ளை, நெல்லை சந்திப்பு பால முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Nellai ,Nellai Government Hospital ,Nellai… ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்