×

2 பெண்களை கட்டையால் தாக்கி 3 சவரன் கொள்ளை: வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை; அதிகாலை நடை பயிற்சிக்கு சென்றபோது

ஒடுகத்தூர், டிச.22: பள்ளிகொண்டா அருகே நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற 2 பெண்களை கட்டையால் தாக்கி 3 சவரன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் புதுமனை பகுதியை சேர்ந்தவர்கள் தேவராஜ் மனைவி முருகம்மாள்(65), சுந்தர் மனைவி பிலோமினா(53), இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் முருகம்மாள் மற்றும் பிலோமினா ஆகிய இருவரும் அதே பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு இருட்டான பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பாய்ந்து வந்து முருகம்மாளை கட்டையால் தலையின் பின்பகுதியில் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்க நகையை பறித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிலோமினா ‘திருடன் திருடன்’ என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம ஆசாமி பிலோமினாவையும் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து 3 சவரன் நகையுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடி உள்ளார்.

இதில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தபடி அலறி துடித்த பெண்களின் சத்தம் கேட்டு, வந்த அக்கம் பக்கத்தினர் படுகாமடைந்த முருகம்மாளை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பிலோமினாவை குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 பெண்களை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Odugathur ,Pallikonda ,Vellore district ,
× RELATED சென்டர்மீடியன் மீது கார் மோதி சேலம்...