×

ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம்; நாசே ராமச்சந்திரன் தலைமையில் காங்கிரசில் பயணிக்க முடிவு: வேறு கட்சிகளுக்கு தாவுவதை தடுக்க வியூகம்

சென்னை: தமிழக காங்கிரசில் முக்கிய பதவிகளை பெற்றிருந்தாலும், அவரவர் தங்கள் கோஷ்டி தலைவர்களின் கீழ் பயணித்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது. அதேபோன்று, கட்சி பதவி என்றாலும், தேர்தலில் சீட் வாங்குவது என்றாலும் தனியாக நின்று வாய்ப்பை பெறுவது என்பது காங்கிரஸ் கட்சியில் இயலாத காரியம். எனவே, முக்கிய தலைவர்களின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து பதவிகளை மட்டுமல்ல, தேர்தலில் சீட் வாங்குவதும் தமிழக காங்கிரசில் எழுத்தபடாத ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது மாநில தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதேநேரம், பதவிகளும் கோஷ்டி தலைவர்களுக்கு கோட்டா அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு தலைவர்களின் கீழ் குறிப்பிட்ட அளவில் மாவட்ட தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் இருக்கிறார்கள்.

தமிழக காங்கிரசின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ்.இளங்ேகாவன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெற்று 34 ஆண்டுகளுக்கு பின்பு எம்எல்ஏவாக பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அவரது மேடை பேச்சு, கட்சியினர் மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இருக்கும்.

பொதுக்கூட்டங்களில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேச்சை கேட்க காங்கிரசார் மட்டுமல்ல, மாற்று கட்சியினரும் கூடுவது வழக்கம். அந்த அளவுக்கு அனல் பறக்கும் பேச்சால் பிரபலமானவர். இதனால் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு என்று தீவிர ஆதரவாளர்கள் இருந்து வந்தனர். தற்போது அவரும் மறைந்து விட்டார், அவரது அரசியல் வாரிசான திருமகன் ஈவெராவும் மறைந்து விட்டதால், ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக அவரது ஆதரவாளர்கள் பலர் காங்கிரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். மாவட்ட தலைவர்களை பொறுத்தவரை 27 பேர் அவரது ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைமை இல்லாததால் அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கவில்ைலை என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியில் தனித்து விடப்பட்டதாக ஆதங்கப்பட்டு வரும் அவர்களை, மாற்று கட்சியினர் பலர் தங்கள் கட்சிகளுக்கு இழுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதை தடுக்கும் வகையில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் மீண்டும் வலுப்பெற்று எழுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமையில் காங்கிரசில் பயணிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் மீண்டும் ஒன்று திரட்டும் வகையில், தன்மான தலைவர் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் ரகசிய கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில், ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தீவிர ஆதரவாளர்களாக கருதப்படும் நாசே ராமச்சந்திரன், ஏபிசி.சண்முகம், ரங்கபாஷ்யம், குலாம் மொய்தீன், ஜோதி, ஏ.ஜி.சிதம்பரம், சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவது, வேறு கட்சிகளுக்கு செல்வதை தடுப்பது, காங்கிரசை வலுப்படுத்துவது, ஈரோட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு சிலை அமைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 24ம்தேதி சென்னையில் ஒன்று கூடுவோம் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் செனை்னயில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம்; நாசே ராமச்சந்திரன் தலைமையில் காங்கிரசில் பயணிக்க முடிவு: வேறு கட்சிகளுக்கு தாவுவதை தடுக்க வியூகம் appeared first on Dinakaran.

Tags : EVKS.Ilangovan ,Congress ,Nasee Ramachandran ,Chennai ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...