களக்காடு, ஜூலை 21: களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் உற்சாகத்துடன் குளித்தனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவது சிறப்பு மிக்கதாகும். தலையணையில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமாக நேற்று களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் உற்சாகத்துடன் குளித்தனர்.
மேலும் தடுப்பணை அருவியிலும் ஆனந்தத்துடன் தலையை நனைத்தனர். பின்னர் ஆற்றோரங்களிலும், பூங்காவிலும் அமர்ந்து உணவருந்தினர். பெண்களும் அதிகளவில் வந்திருந்தனர். சிறுவர்கள் பூங்காவில் மகிழ்ச்சியுடன் விளையாடினர். நேற்று வெயில் இல்லாமல் அவ்வபோது சாரல் மழை பொழிந்ததால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். நுழைவு கேட்டில் இருந்து, தலையணை ஆற்றுக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் கடமான்கள் கூட்டம் சுற்றி திரிந்தது, இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலுதவி மையம் அமைக்கப்படுமா?
தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் ஆற்றில் வழுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். நேற்றும் ஒரு சிறுவன் பூங்காவில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இவ்வாறு படுகாயம் அடையும் சுற்றுலா பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தலையணையில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.
