×

பைனான்சியரிடம் ரூ.50ஆயிரம் பறிப்பு

தர்மபுரி, ஜூலை 21: தர்மபுரியில் பைனான்சியரிடம் ரூ.50ஆயிரம் பறித்து வனப்பகுதிக்குள் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (58). பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, அதை சனிக்கிழமை தோறும் வசூல் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காளிமுத்து, வாசிக்கவுண்டனூர், கதிரிபுரம் பகுதிகளில் 20பேரிடம் வட்டிபணம் ரூ.30 ஆயிரத்தை வசூல் செய்து விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

வழியில் பாப்பிரெட்டிப்பட்டி கவரமலை அருகே குடண்டல்மடுவு வந்த போது, டூவீலரை சாலைக்கு அருகில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து 160 அடி தூரத்தில் மரத்துக்கு கீழ் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது பின்பக்கமாக திடீரென வந்த மர்ம நபர், வெள்ளை துண்டால் காளிமுத்துவின் முகத்தை மூடி அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் ஏற்கனவே வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த ரூ.20ஆயிரம் என ரூ.50 ஆயிரத்தை பறித்துக்சென்று வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டார். இதுகுறித்து காளிமுத்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைனான்சியரிடம் ரூ.50ஆயிரம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kalimuthu ,Bommidu Pillayar Koil Street ,Pappireddipatti ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு