×

அதிமுக தனித்துதான் ஆட்சி: எடப்பாடி மீண்டும் பேட்டி

சேலம்: அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆரம்பத்திலேயே கூறினார். இது அதிமுக-பாஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அதன்பிறகு பேட்டியளித்த அமித் ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். முதல்வராக அதிமுகவில் இருந்து ஒருவர் வருவார் என்று கூறினார். எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறவில்லை. இது பாஜ-அதிமுக கூட்டணிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் அதிமுகவும் பாஜகவும் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று மீண்டும் பேட்டி ஒன்றில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து, புதுச்சேரியில் பிரசார பயணத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, “தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று மட்டும் ஒரே வரியில் கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அமித் ஷாவின் கருத்து குறித்து பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அமித் ஷாவின் கருத்துதான் எங்களுக்கு வேதவாக்கு என்று கூறி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற கருத்தை உறுதிப்படுத்தினார். இதனால், அதிமுக-பாஜ கூட்டணியில் ஒரு பிணைப்பில்லாத நிலை தொடர்ந்து வருகிறது.

கூட்டணி ஆட்சிதான் என்ற கருத்தில் பாஜ தலைமை உறுதியாக இருக்கும் பட்சத்தில், அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று இன்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோயில் அருகில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். 2026 தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இதனால் பல கட்சிகள் இன்னும் கூட்டணி முடிவை தெரிவிக்கவில்லை.

பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தான் ேதர்தல் அறிவிப்பார்கள். அப்போது பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. அதனால் தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக திகழும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். பேட்டியின் போது அவரிடம், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். ரைட்…. என்று கூறிவிட்டு ஆளை விட்டால் போதும் என்று சென்று விட்டார். அவர் அமித் ஷா மீதான பயத்தின் காரணமாகத்தான் தனித்துதான் ஆட்சி என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு செல்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

The post அதிமுக தனித்துதான் ஆட்சி: எடப்பாடி மீண்டும் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Weidapadi ,SALEM ,EDAPPADI PALANISAMI ,AMIT SHAH ,Union Interior Minister ,Amit ,National Democratic Alliance ,Tamil Nadu ,Edappadi ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...