×

“படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும்” : ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை : பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கு தனி பேருந்துகள் இயக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது. பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பேருந்து நடத்துநர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் கேட்பதில்லை. பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்வதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

படியில் மாணவர்கள் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்; மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். எதிர்காலத்தில் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தனர்.

The post “படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும்” : ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,Ram Kumar ,Thoothukudi ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் தீவிரமடையும் கடுங்குளிர்...