×

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவை ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன. சென்னை மாநகரின் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.1.2026 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சென்னையில் ஆண்டுதோறும் தை மாதம் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி வரும் 14-ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதே போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நமது மாநிலத்தின் பாரம்பரிய கலைத் திருவிழாவினை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் போது ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகள் 14.1.2026 அன்று மாலை 6 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளன.

தொடக்க விழாவை அடுத்து, ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம்- அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லவாரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் 15.1.2026 முதல் 18.1.2026 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.

‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், , ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய விழாவாகும் இது என்று குறிப்பிட்டு, நமது பண்பாட்டுப் பெருமிதங்களை, அருங்கலை சிறப்புகளை மீட்டெடுத்து, இளம் தலைமுறையினர் பார்த்து மகிழத்தக்க வகையிலே ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாட எற்பாடுகள் செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர் பண்பாட்டின் ஆயிரமாயிரம் ஆண்டுகால தொடர்ச்சியை எடுத்துக்காட்டும் வண்ணம், ‘கீழடி அருங்காட்சியகம்’ அமைத்தும், தற்போது புதியதாக ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைத்தும் இந்த அரசு பெருமைமிக்க நம் பண்பாட்டினை, வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நமது சீர்மிகு மண்சார்ந்த இசையும், கலையும் காலத்தால் அழியாமல் பாதுகக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்ற வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் இது நமது இல்லத் திருவிழா என்று இணைந்து கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர்.

சென்னையில் விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வரலாற்று பாரம்பரியத்தையும் செழுமையான, பண்பாட்டையும் வெளிப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் வாழும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையிலும் சங்கமம் நம்ம ஊரு திருவிழாக்கள் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்ட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பயன்பெறவும், தமிழ் மண்ணின் வளமான கலை வடிவங்கள் உயிர்போடு திகழவும் உதவுகின்றன.

Tags : Chief Minister ,Chennai Sangam-Namma Uru Festival ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Chennai Sangamam-Namma Uru Festival ,Tamils ,festival ,Pongal festival ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்...