×

2026ல் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் பேட்டி

 

திருமலை: வரும் 2026ம் ஆண்டில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 24ம்தேதி காலை 8.54 மணிக்கு எல்.வி.எம். 3 ராக்கெட் மூலம் புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முற்றிலும் வணிக ரீதியாக அனுப்பக்கூடிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தக்கூடியது. 1963ம் ஆண்டு நவம்பர் 21ம்தேதி இஸ்ரோ தொடங்கியபோது பயிற்சி ராக்கெட்டை, அமெரிக்காவின் ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பினோம். அப்போது, வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது 60 ஆண்டுகளுக்கு நாம் பின் தங்கியிருந்தோம்.

இப்போது இஸ்ரோ அசுர வளர்ச்சி அடைந்து 6 ஆயிரம் கிலோவிற்கு மேல் எடை கொண்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளை தற்போது இந்தியா அனுப்புகிறது. இதுவரை 34 நாடுகளை சேர்ந்த 433 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் இந்திய வீரர்களை 400 கிலோ மீட்டர் வரை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வரக்கூடியது. இதற்காக இதுவரை 8 ஆயிரம் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 2027ம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக 3 கட்டமாக ஆட்கள் இல்லாமல் அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். சந்திரயான்-3 செயற்கைக்கோள் முதன்முறையாக தென் துருவத்தில் இறக்கிய நாடாக நாம் இருக்கிறோம். சந்திரயான்-4 திட்டம் நிலவில் செயற்கைக்கோளை இறக்கி அங்கிருந்து மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டமாகும்.

அது 2027ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 2026ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டமாகும். இதில் 5 பிஎஸ்எல்வி, எச்ஏஎல்எல் அன் டி மூலம், நேவிக் செயற்கைக்கோள்கள், எஸ்.எஸ்.எல்.வி மற்றும் ஸ்கை ரூட் தனியார் செயற்கைக்கோள்கள் உள்பட 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மேலும் ககன்யான் திட்டத்திற்காக ஆளில்லா 2 ராக்கெட் விண்ணில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : president ,Israel ,THIRUMALI ,ISRO ,NARAYAN ,THIRUPATI TEMPLE ,Narayanan ,Tirupathi Eumalayan Temple ,Swami ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...