லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித்சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். மூத்த வீரர் பும்ரா கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த நிலையில், முதுகுவலி காரணமாக அவர் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாத நிலையால் அப்பதவியை நிராகரித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டி: ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான் பிசிசிஐயை தொடர்பு கொண்டேன். 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் ஆட நான் ஆவலாக இருந்தேன். ஆனால் தனக்கு முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ நிபுணர்களுடன் நான் பேசியபோது என்னால் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாது என தெரிந்தது. இதனால் பணிசுமை காரணமாக தன்னை கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்க வேண்டாம் என்று நான் தான் பிசிசிஐயிடம் கூறிவிட்டேன். இதன் காரணமாக தான் என்னை பிசிசிஐ கேப்டனாக நியமிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் ஒரு கேப்டனாக இருந்தால் தொடர்ந்து 5 போட்டிகளிலும் நான் விளையாட வேண்டும். வெறும் 3 போட்டிகள் மட்டும் விளையாடிவிட்டு அடுத்த போட்டிகளில் வேறு ஒருவரை கேப்டனாக விளையாட சொல்லுங்கள் என்று கூறுவது முட்டாள்தனம் என நான் நினைக்கின்றேன். இதனால் தான் தொடர் முழுவதும் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரர் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். தற்போது கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் எதிர்காலத்திலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று நம்புகிறேன், என்றார்.
மேலும் 3 டெஸ்ட்டில் ஆடுவேன். ஆனால் அவை எந்த போட்டிகள் என்பது முடிவு செய்யப்படவில்லை. நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் ஆடுவேன். மற்ற 2 டெஸ்ட் எவை என்பது சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். கண்டிப்பாக என்னால் 3 டெஸ்ட்டில் ஆட முடியும். ஒரு வீரராக நான் ஆடும் போட்டியில் முழுமையான பங்களிப்பை வழங்குவேன், என்றார்.
ரோகித்-கோஹ்லியின் கலவை சுப்மன் கில்: பட்லர்
இங்கிலாந்தின் முன்னாள் ஒயிட்பால் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர் அளித்துள்ள பேட்டியில், ”இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் இரண்டு முன்னாள் இந்திய கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் கலவை.ரோகித்தின் அமைதியான மற்றும் நிதானமான இயல்பு, கோஹ்லியின் தீவிரம் மற்றும் ஆர்வத்தை அவர் கொண்டுள்ளார்.அவர் உண்மையிலேயே ஒரு அற்புதமான வீரர். அற்புதமான இளைஞன்,” என்றார். ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கில்லின் தலைமையில் பட்லர் ஆடுவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டர்சன்-சச்சின் டிராபி பட்டோடி பதக்கம்
கடந்த 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் அந்நாட்டு அணியுடன் இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் இரு நாட்டு டெஸ்ட் தொடர் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என அழைக்கப்பட உள்ளது. இருப்பினும் படோடியை கவுரவிக்கும் வகையில், தொடரின் முடிவில் வெற்றிபெறும் கேப்டனுக்கு பட்டோடி பதக்கம் வழங்கப்படும்.
சமநிலையான ஆடுகளம்
இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான லீட்ஸ் ஆடுகளத்தின் தலைமை கண்காணிப்பாளர் ராபின்சன் கூறுகையில், பவுலிங், பேட்டிங்கிற்கு சமநிலையான பிட்சை தயாரித்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு இங்கிலாந்தின் வானிலை பந்து வீச்சாளர்களை விட பேட்டர்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கடைசி 2 நாட்களிலும் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும், என்றார்
சாஸ்திரி தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன்
இங்கிலாந்து-இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தேர்வு செய்துள்ளார். அதன்விபரம்: ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப்பன்ட்(வி.கீ, துணை கேப்டன்) ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா / அர்ஷ்தீப் சிங்.
அணியுடன் இணைந்த கம்பீர் லீட்சில் இந்திய வீரர்கள் பயிற்சி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் நேற்று லீட்சை வந்தடைந்தனர். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் 2 பயிற்சி அமர்வுகளை மேற்கொள்கின்றனர். முதல் பயிற்சி இன்று காலையில்( இந்திய நேரப்படி பிற்பகல்) நடந்தது. இரண்டாவது பயிற்சி நாளை பிற்பகலில் (இந்திய நேரப்படி மாலை 7மணிக்கு பின்) நடைபெறும். இதனிடையே தாயாருக்கு உடல்நிலை பாதிப்பால் இந்தியா திரும்பிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேற்று மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தார்.
The post பணிச்சுமையால் கேப்டன் பதவியை நிராகரித்தேன்; சுப்மன் கில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துவார்: பும்ரா நம்பிக்கை appeared first on Dinakaran.
