×

மாற்று இடம் வழங்கக்கோரி மீன் மார்க்கெட்டை காலி செய்ய மறுத்து போராட்டம்: கமிஷனரிடம் வியாபாரிகள் மனு

மதுரை, ஜூன் 12: மாற்று இடம் வழங்கும்படி கோரிய நெல்பேட்டை வியாபாரிகள் மீன் மார்க்கெட்டை காலி செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, நெல்பேட்டையில் 37 கடைகளுடன் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த மீன் மார்க்கெட் பகுதியில், சுகாதாரம் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. எனவே இதனை அகற்றிவிட்டு, அதே இடத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது செயல்படும் மீன் மார்க்கெட்டை காலி செய்ய வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டது.

ஆனால் அதனை காலி செய்ய மறுத்து, வியாபாரிகள் வழக்கம் போலவே மீன் விற்பனை செய்து வருகின்றனர். புதிய மீன் மார்க்கெட் கட்டும் வரை தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறும் வியாபாரிகள், மாற்று இடம் கொடுத்த பின் மார்க்கெட்டை காலி செய்வதாக தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று மீன் மார்க்கெட்டை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். முன்னதாக கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்களுடன் கடைகளை இடிக்க முயன்றபோது, நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனை சந்தித்து, தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி தீர்வு கண்டபிறகு நடவடிக்கை எடுக்கும்படி வியாபாரிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீன் மார்க்கெட் இடிக்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. நெல் பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரிகள் நல சங்கம் சார்பில், மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், ‘புதிய கடைகளை தற்போதைய கடைக்காரர்கள் அனைவருக்கும் ஒதுக்கித் தருவதை வரவேற்கிறோம். தொழில் வரி ரசீது போட்டுத்தருவதுடன், மின்வசதி, தண்ணீர், பொருட்கள் பாதுகாக்கும் வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும். புதிய மார்க்கெட் திறக்கும் வரை, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மீன் விற்பனை செய்ய தற்காலிக மாற்று இடம் வழங்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.

The post மாற்று இடம் வழங்கக்கோரி மீன் மார்க்கெட்டை காலி செய்ய மறுத்து போராட்டம்: கமிஷனரிடம் வியாபாரிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Nelpettai ,Nelpettai, Madurai ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு