சென்னை: தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் டெல்லியில் நேற்று பிற்பகலில் நடந்தது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபிராமன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். காவிரி தொழில்நுட்பக் குழு உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் நிஷா ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
மேலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.74 அடியாகவும், நீர் இருப்பு 79.508 டிஎம்சியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை இம் மாதம் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த மழை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே வரும் ஆண்டில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான முறையே 9.19 டிஎம்சி மற்றும் 31.24 டிஎம்சி நீரினை உச்சநீதிமன்ற ஆணையின் படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்ய ஆணையிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரையும், ஆக 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தாரை புதிதாக தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெகநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து மலர் கொத்து வழங்கினார். இந்நிகழ்வின் போது காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியம் உடன் இருந்தார்.
The post தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும்: கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.
