×

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் யார்..?

புதுடெல்லி: வரும் ஜூன் மாதம், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே திடீரென போர் மேகங்கள் சூழ்ந்ததால் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போது போர் மேகங்கள் விலகியதை அடுத்து, மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்போட்டிகள், இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இப்போட்டிகள், வரும் ஜூன் 20ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளன. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில், ஷர்துல் தாக்குர் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இவர் ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து சூழலுக்கு பொருத்தமானவராக இருப்பார் என கருதப்படுகிறது. தவிர, இந்திய அணியில், துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இஷான் கிஷணுக்கு வாய்ப்பு இருக்காது என தகவல்கள் கூறுகின்றன.

இந்திய அணியில், ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அற்புதமாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனின் பெயர் அதிகமாகவே அடிபடுகிறது. ரோகித் சர்மாவின் வெற்றிடத்தை இவர் நிரப்புவார் என தேர்வாளர்கள் கருதுவதாக தெரிகிறது. முகேஷ் குமார், யாஷ் தயாள் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிட்டும் எனத் தெரிகிறது.

The post இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் யார்..? appeared first on Dinakaran.

Tags : England ,Indian ,Test ,New Delhi ,cricket team ,Sai Sutherson ,Shreyas Iyer ,Shardul Thakur ,IPL ,India ,Pakistan ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்