ரபாட்: ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் நாக்அவுட் சுற்றுக்குள் தான்சானியா, துனீஷியா ஆகிய இரு அணிகள் கடைசியாக நுழைந்துள்ளன. ஆப்ரிக்காவை சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் மோதும் ஆப்கோன் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் மொராக்கோவின் ரபாட் நகரில் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் 14 அணிகள் மோதும் நாக்அவுட் சுற்றில் இதுவரை 14 அணிகள் இடம் பெற்ற நிலையில், அதில் இடம்பெறும் கடைசி இரு அணிகள் எவை என்பதில் குழப்பம் நிலவியது.
இந்நிலையில், தான்சானியா, துனீஷியா அணிகள் இடையே நேற்று முன்தினம் போட்டி நடந்தது. போட்டி துவங்கியது முதல் இரு அணிகளின் வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியபோதும், கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கோல்கள் எளிதில் விழவில்லை. இருப்பினும், போட்டியின் 43வது நிமிடத்தில் துனீஷியாவின் இஸ்மாயில் கார்பி அட்டகாசமாக செயல்பட்டு தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார்.
அதற்கு பதிலடி தரும் வகையில், தான்சானியா அணியின் பைசல் சலும், 48வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தார். இரு அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டதால் இப்போட்டி டிராவில் முடிந்தது. அதனால், இந்த இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முன்னேறி நாக் அவுட் சுற்றில் நுழையும் கடைசி இரு அணிகளாக உருவெடுத்தன. ஆப்கோன் போட்டிகளின் குரூப் ஸ்டேஜ் முடிவில், ஏ பிரிவில், மொராக்கோ, மாலி ஆகிய இரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தன.
பி – பிரிவில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. சி – பிரிவில், நைஜீரியா, துனீஷியா அணிகளும், டி – பிரிவில் செனகல், காங்கோ, பெனின் அணிகளும் நாக் அவுட் சுற்றில் நுழைந்தன. இ – பிரிவில் அல்ஜீரியா, பர்கினா பாஸோ, சூடான் அணிகளும், எப் பிரிவில் ஐவரி கோஸ்ட், 5 முறை சாம்பியன் கேமரூன், மொசாம்பிக் அணிகளும் நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளன.
