ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே போட்டியில் நேற்று, மும்பை அணி, 87 ரன் வித்தியாசத்தில் கோவாவை வென்றது. உள்நாட்டு அணிகள் மோதும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மும்பை, கோவா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான அங்ரீஸ் ரகுவன்ஷி, கவுசிக் வீசிய 8வது ஓவரில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு மற்றொரு துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முஷீர் கான் இணை சேர்ந்து அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை, 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின், முஷீர் கான், சர்ப்ராஸ் கான் இணை சேர்ந்து, ரன் வேட்டையாடினர். முஷீர் கான், 31வது ஓவரில் 60 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் புயலாய் மாறி ரன்மழை பொழிந்த சர்ப்ராஸ் கான், 75 பந்துகளை எதிர்கொண்டு 14 சிக்சர், 9 பவுண்டரிகள் விளாசி 157 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்தோரில் சித்தேஷ் லாட் 17, கேப்டன் ஷர்துல் தாக்குர் 27, ஹர்திக் தமோர் 53, ஷாம்ஸ் முலானி 22, துஷார் தேஷ்பாண்டே 23 ரன்கள் எடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்கள் அர்ஜுன் டெண்டுல்கர் 24, காஷ்யப் பகாலே 21 ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர். பின் வந்த ஸ்நேஹல் கவுதாங்கர் 27, சுயாஷ் பிரபுதேசாய் 31, லலித் யாதவ் 64 ரன் எடுத்து அவுட்டாகினர். கோவா அணியில் அபினவ் தேஜ்ராணா நேர்த்தியாகவும், பொறுப்பாகவும் ஆடி 70 பந்துகளில் 8 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 100 ரன் எடுத்து துரதிருஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் தீப்ராஜ் கவோன்கர் 28 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 70 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். 50 ஓவர் முடிவில் கோவா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 357 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால், 87 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி இமாலய வெற்றி பெற்று அசத்தியது. ஆட்ட நாயகனாக, 157 ரன் குவித்த சர்ப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார்.
