×

விஜய் ஹசாரே கிரிக்கெட்: பேட்டிங்கில் மீண்டும் கோட்டை விட்ட தமிழ்நாடு; உத்கர்ஷ் சதத்தால் ஜார்க்கண்ட் வெற்றி

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் நேற்று, ஜார்க்கண்ட் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை அபாரமாக வென்றது. உள்நாட்டில் உள்ள அணிகளால் விளையாடப்படும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள், பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு – ஜார்க்கண்ட் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஜெகதீசன் ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு துவக்க வீரர் ஆதீஷ் 33, பின் வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 49, பாபா இந்திரஜித் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த வீரர்கள் அதிரடி காட்டாததால், ரன் வேகம் கடைசி வரை அதிகரிக்கவில்லை. அதனால், 45 ஓவரில் தமிழ்நாடு அணி, 243 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜார்க்கண்ட் தரப்பில் சுபம் சிங் அட்டகாசமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் பறித்தார். தவிர, சுஷாந்த் மிஸ்ரா 2, மனிஷி, அனுகுல் ராய், உத்கர்ஷ் சிங், ரஜந்தீப் சிங் தலா ஒர விக்கெட் எடுத்தனர்.

பின், 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஜார்க்கண்ட் களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஷிகார் மோகன், உத்கர்ஷ் சிங் தமிழ்நாடு அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஷிகார் மோகன் 90 ரன்னில் விக்கெட் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் உத்கர்ஷ் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 120 பந்துகளில் 3 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் விளாசினார். அதனால், ஜார்க்கண்ட் அணி, 41 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன் விளாசி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த டிசம்பர் 29ம் தேதி நடந்த போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்காததால், கர்நாடகாவிடம் தோல்வியை தழுவினர். தற்போது, ஜார்க்கண்டிடமும் தோல்வியை தழுவியுள்ளனர்.

Tags : Vijay ,Hazare Cricket ,Tamil ,Nadu ,Utkarsh ,Jharkhand ,Ahmedabad ,Tamil Nadu ,Vijay Hazare Trophy One-Day International match ,Vijay Hazare Trophy ,
× RELATED விஜய் ஹசாரே கிரிக்கெட்: ஜூயல் ரன் வேட்டை; அசாமை வீழ்த்திய உ.பி.