மும்பை: நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடஉள்ளது.இதில் ஒருநாள்போட்டிகள் முறையே ஜனவரி 11ம் தேதி வதோதரா, 14ம்தேதிராஜ்கோட், 18ம்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் டி.20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள்போட்டிக்கான அணி வரும் 3 அல்லது 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஒருநாள்போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அக்டோபர் 25ம் தேதி சிட்னியில் நடந்த போட்டியின்போது காயம் அடைந்தார். மண்ணீரலில் சிதைவு ஏற்பட்டதால் கடந்த 2 மாதமாக எந்தபோட்டியிலும் ஆட வில்லை.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு அவர் தயாராகி வந்தார். பெங்களூரு தேசிய அகாடமிக்கு உடற்தகுதியை நிரூபிக்க வந்தார். கடந்த 2 மாதங்களில் ஸ்ரேயாஸ் சுமார் 6 கிலோ எடை குறைந்துள்ளார். அவர் வலைகளில் அழகாக பேட்டிங் செய்தாலும், இன்னும் குணமடையவில்லை. அவரது பேட்டிங்கில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் எடை குறைவால் தசை நிறை குறைந்துள்ளது, இது அவரது உகந்த வலிமை அளவை மேலும் பாதித்துள்ளது. இதனால் பிசிசிஐ ரிஸ்க்எடுக்க விரும்பவில்லை. அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என பிசிசிஐ அதிகாரி கூறி உள்ளார்.
முகமது ஷமிக்கு வாய்ப்பா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அவருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் பிரசித் கிருஷ்ணா சொதப்பினார். இதனால் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம். அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா ஆகியோருடன் 3வது பவுலராக ஷமி இடம்பெறுவார் என தெரிகிறது.
