பந்தலூர்: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து மாடியில் ஏறி குதித்து காட்டு யானை அட்டகாசம் செய்தும், காரை தூக்கி வீசியது. இதில் தொழிலாளி காயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில் நேற்று காலை ஒற்றை காட்டு யானை ஒன்று, செய்தலவி என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. பின்னர், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து சென்றது. யானை வீட்டிற்குள் புகுந்ததை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் கதவை அடைத்துக்கொண்டு சத்தமிட்டு கதறினர்.
இதனால், யானை அங்கிருந்து சென்று சாலையில் நிறுத்தியிருந்த காரை தும்பிக்கையால் தூக்கி எறிந்து, தொழிலாளி சௌக்கத்தலி (45) என்பவரை துரத்தியது. தப்பியோடிய அவர் கீழே விழுந்து காயம் அடைந்து, கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் நெலாக்கோட்டை பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார், வனத்துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது கும்கி யானையை வைத்து பிடித்து முதுமலை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, வரும் 8ம் தேதி கூடலூர் டிஎப்ஓ வெங்கடேஷ் பிரபுவிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கும் கூடலூர்- ஊட்டி பகுதிக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post பந்தலூர் அருகே வீட்டு மாடியில் ஏறி குதித்து காட்டு யானை அட்டகாசம்: தொழிலாளி காயம்; காரை தூக்கி வீசியது appeared first on Dinakaran.
