சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 22ம் தேதி 22.4.2025, ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இந்த விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த 29ம் தேதி முதல் 5ம் தேதி (நாளை) வரை தமிழ்நாடு முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வார விழாவின் நிறைவு விழா நாளை (5ம் தேதி) காலை 10.30 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
விழாவுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகிக்கின்றனர். எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் தமிழ் வளர்ச்சி துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்கு பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி முதல்வர் விழா பேருரையாற்றுகிறார்.
விழாவில் பல்லவி இசைக்குழுவின் வாயிலாக ‘பாவேந்தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் ‘தமிழ் அமுது-நாட்டிய நிகழ்ச்சி’யும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ மாபெரும் நடன நிகழ்ச்சியும், கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் ‘பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா! சமூக உணர்வா! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.
The post பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வாரவிழாவின் நிறைவு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது appeared first on Dinakaran.
