மூணாறு/ வருசநாடு, ஏப். 17: தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வருசநாடு அருகே மேகமலை வனப்பகுதி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஆகும், இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி ,ராஜநாகம் கருப்பு வெள்ளை நிறத்தில் மந்திகள், மான்கள் உள்ளிட்டவை வசிக்கின்றன தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள் அனைத்தும் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் சாலைகளுக்கும் இடம்பெற தொடங்கியுள்ளது. மேலும் மேகமலை வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, காட்டுப்பகுதியில் மெகா கொசுக்கள் உருவாகி வருகின்றன. இதனால் யானை, மான்கள், கருப்பு மற்றும் வெள்ளை நிற மந்திகள் சிறுத்தைகள் மலையடிவார பகுதியில் முகாமிட்டு வருகிறது எனவும் தெரிவித்தனர். தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சுருளி, க.புதுப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவை அடிக்கடி, மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனை விரட்டுவதற்கு, விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் காட்டுப்பகுதிக்குள் விரட்டினாலும், மீண்டும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் தேவதானப்பட்டி காட்ரோடு அருகே பரசுராமபுரத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (45) தோட்டத்தில் மாட்டுக்கொட்டைகளில் மாடுகளுடன் கட்டிவைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை காணவில்லை. காலையில் எழுந்து பார்த்தபோது கன்றுகுட்டியை சிறுத்தை கடித்து இழுத்துச்சென்று அருகே உள்ள புதருக்குள் பாதி தின்ற நிலையில் போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதே போல் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (50) என்பவரது விவசாய நிலத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்துச் சென்றது.
கடந்த மாதம் அதற்கு முன்பு இதே போல் ஆடுகளை சிறுத்தை கொன்று தின்றது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தமிழக – கேரள எல்லையோரப் பகுதி மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் தொடர் அட்டகாசம்: வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.
