
சென்னை: உட்கட்சி பூசல் எதிரொலியாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி, நீக்கப்பட்டார். இனி அவர் கட்சிப் பணியை மேற்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் உள்பட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணை முடிந்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்குப் பிறகு அவரது மனைவி பொற்கொடியை மாநிலத் தலைவராக அறிவிக்க வேண்டும் என ஆர்ம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் பட்டாபிராமைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அன்று முதலே கட்சியினர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கினர். பெரம்பூரில் செயல்பட்டு வந்த தலைமை அலுவலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆனந்தன் வருவதை தவிர்த்து வந்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் மூலம் பதவி அடைந்தவர்கள் ஒவ்வொருவராக மாற்றப்பட்டு கட்சியில் ஆனந்தனின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது கட்சியில் ஆம்ஸ்ட்ராங் அணியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்தார்.
இந்த விஷயம் ஆனந்தனுக்கு முறைப்படி அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அன்று முதல் ஆனந்தன் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்களை கட்சி நிகழ்ச்சிகளில் அழைப்பதை தவிர்த்து வந்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் மூலம் போடப்பட்ட பதவிகளையும் பறித்து மற்றவர்களுக்கு கொடுக்கும் பணிகளும் நடந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாபிராம் பகுதியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு பேனர் மற்றும் அழைப்பிதழ்களிலும் ஆம்ஸ்டாங்கின் மனைவி பொற்கொடி பெயர் இடம் பெறவில்லை. இதனையடுத்து, பொற்கொடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேசிய ஒருங்கிணைப்பாளரிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், அப்போது பொற்கொடி, தேசிய ஒருங்கிணைப்பாளரை பார்த்து, கட்சியின் பைலா என்னவென்று இவர்களுக்கு தெரியுமா, யார் யாருக்கோ பொறுப்பு தருகிறார்கள் என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ஒரு வாரத்திற்குள் உரிய முடிவு எடுக்கப்படும் என தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இது எந்த வகையில் நியாயம்..?
கட்சிப் பணிகளில் இனி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஈடுபட மாட்டார் என்ற அறிவிப்பு வெளிவந்த பிறகு நேற்று மாலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். பொற்கொடி பேசுகையில், ‘‘ஆம்ஸ்ட்ராங் வழக்கை நடத்துவதாக கூறி தான் ஆனந்தன் கட்சிக்குள் வந்தார் ஆனால் பழைய நிர்வாகிகள் பலரை அவர் நீக்கிவிட்டார். என்னை வீட்டில் இருந்து வழக்கை நடத்தும்படி கூறுகிறார். இது எந்த வகையில் நியாயம். யாருடைய தூண்டுதலின் பெயரில் இவ்வாறு நடக்கிறது என தெரியவில்லை. விரைவில் கட்சியின் செயற்குழுவை கூட்டி நல்ல முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
தனிக்கட்சி தொடங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி..?
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி விரைவில் தொடங்குவார் என்றும், அதில் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் அனைவரும் இடம் பெறுவார்கள் எனவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் தரப்பில் இருந்து எந்த ஒரு பிரச்னையும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஆனந்தன் ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் கீனோஸ் என்பவருக்கு கட்சியில் மாநில பொதுச் செயலாளர் பதவியும், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படும் போது அவருடன் இருந்த மற்றொரு அண்ணன் வீரமணியின் மகன் ரீகன் என்பவருக்கு மாநில செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனந்தன் தலைமையில் கட்சியை வலுப்படுத்துவோம்: பிஎஸ்பி மத்திய ஒருங்கிணைப்பாளர் தகவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்பியுமான ராஜாராம்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மாநில தலைவர் வழக்கறிஞர் பி.ஆனந்தன் தலைமையில் கட்சியை வளர்ந்து மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெறுவோம். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் தேசிய தலைவர் மாயாவதி முழக்கமிட்டது போல், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். நீதியினை நிலைநாட்ட வேண்டும். மாயாவதி உத்தரவின்படி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் கவனித்து கொள்வார். இனிமேல், அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார் என அறிக்கையில் கூறியுள்ளார்.
The post உட்கட்சி பூசல் எதிரொலி; பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: கட்சிப் பணியை மேற்கொள்ள மாட்டார் என அறிவிப்பு appeared first on Dinakaran.
