×

மயிலத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

 

மயிலம், ஏப். 11: மயிலத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப்ரல் 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை மயிலம் 20ம் பட்டம் பாலய சுவாமிகள் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முருகனுக்கு தினமும் பால், தயிர், நெய் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.45 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டபடி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் காலை 7.10 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இத்தேர் திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முருக பக்தர்கள் தீர்த்தகுளத்தில் நீராடி முடி காணிக்கை செலுத்தி, பன்னீர், பால், புஷ்ப காவடிகள் எடுத்தனர்.

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பெண்கள், குழந்தைகள் என பலர் அங்கபிரதட்சணம் செய்தனர். சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செஞ்சி.மஸ்தான், மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், ராஜாராம், பழனி, வானூர் முன்னாள் ஒன்றிய தலைவர் சிவா, மாவட்ட பிரதிநிதி வீடூர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

The post மயிலத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Subramania Swamy Temple ,Panguni Utthira festival ,Lord ,Murugan Temple ,Mayilam, Villupuram ,Mayilam ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு