ராயக்கோட்டை, ஏப்.11: ராயக்கோட்டைக்கு புளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஓடுகள் நீக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் புளி வரத்து அதிகரித்துள்ளது. ராயக்கோட்டையை பொறுத்த வரை புளியை நார் நீக்கி நசுக்கி, கொட்டைகளை எடுத்துவிட்டு, அதை சப்பாத்தி புளியாகவும், பூ புளி மற்றும் கிச்சிடிப்புளியாக சமையலுக்கு ஏற்றபடி செய்யும் தொழிலை காலம்,காலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். வழக்கமாக 13 கிலோ கொண்ட ஒரு கூடை புளியை நசுக்கி தயார் செய்ய, கூலியாக ரூ.300 வழங்குகின்றனர். ஒருவர் ஒரு நாளில் 2 கூடை புளியை நசுக்கி தயார் செய்கின்றனர். இந்நிலையில், பெரும்பாலான பெண்கள் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சென்று விட்டதால், புளியை சமையலுக்கு ஏற்றவாறு தயாரிக்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, புளி வரத்து அதிகரித், ஒரு கிலோ கொட்டைப்புளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கும் வியாபாரிகள் பட்டை தட்டி ஓடுகளை நீக்கி, ஏ.சி.குடோன்களில் இருப்பு வைத்து விடுகின்றனர். தேவைப்படும் போது எடுத்து வந்து, நசுக்கி தயார் செய்து விற்பனை செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக புளிக்கு சரியான விலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு விலை உயர்ந்துள்ளது. இதனால், கிலோ ரூ.80க்கு விற்ற சப்பாத்தி புளி ரூ.140க்கும், ரூ.90க்கு விற்ற கிச்சிடி மற்றும் பூ புளி கிலோ ரூ.140 வரையும் விற்பனையாகிறது.
The post ராயக்கோட்டைக்கு புளிவரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
