தேன்கனிக்கோட்டை, ஜன.6: தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அருளாளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் வகுப்பறைகள் சேதமானதால், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறைகள் கட்டுமான பணி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், தாமதமாகியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், தினந்தோறும் பள்ளியின் வராண்டா மற்றும் அங்குள்ள மரத்தடியின் கீழ் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் திறந்தவெளியில் அமர்ந்து படிக்க மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒப்பந்ததாரர் வகுப்பறைகளை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
