×

மதுரவாயலில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மணல் லாரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி: ஏப்ரல் 1ம்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த கட்டண உயர்வை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுங்க கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பதுடன் காலாவதியான சுங்க சாவடிகளை அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்பபெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக, போரூர் சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்த இருந்தநிலையில், போலீசார் அனுமதிக்காததால் மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post மதுரவாயலில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து மணல் லாரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sand truck ,omni ,Maduravoyal ,Poonamalli ,National Highways Authority of India ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் –...