*விரைவில் சீரமைக்க மமக கோரிக்கை
நெல்லை : மேலப்பாளையம் மண்டலம், 52வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கியதால் வீதிகள் அனைத்தும் சகதிகாடாக மாறியுள்ளன.
எனவே, இதில் தனிக்கவனம் செலுத்தி விரைவில் சீரமைக்க வேண்டும் என மமக கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து நெல்லை மாவட்ட மமக துணைச்செயலாளர் காஜா, மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் 52வது வார்டு பகுதியில் உள்ள கரீம் நகர் 1வது தெருவில் பாதாள சாக்கடை பணி நடந்தது. இதற்காக இங்குள்ள வீதிகளில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டன.
இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் திடீரென கோடை மழை பெய்த காரணத்தால் பெருக்கெடுத்த தண்ணீரானது பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கியது. இதனால் அப்பகுதி தற்போது சகதி காடாகவே மாறிவிட்டது.
இதனால் அவ்வழியே கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு பணிநிமித்தம் செல்லும் தொழிலாளர்கள், வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் சகதி காட்டில் சிக்கி கீழே விழும் அபாயம் உருவாகியுள்ளது.
இதேபோல் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்களும் சகதியில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றன. இரவு நேரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் சகதி குழியில் தட்டுதடுமாறி செல்லும் அவலம் தொடர்கிறது. ரம்ஜான் மாத நோன்பு நேரத்தில் அதிகாலையில் தொழுகைக்கு செல்பவர்களும் சாலையில் நடக்க முடியாத நிலை தொடர்கிறது.
எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளில் கூடுதலாக மண் கொட்டி சீரமைக்க முன்வர வேண்டும். இதுவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
The post மேலப்பாளையம் 52வது வார்டில் பாதாள சாக்கடை பணியால் சகதி காடாக மாறிய வீதிகள் appeared first on Dinakaran.
