பந்தலூர் : பந்தலூர் அருகே எருமாடு வெல்ல வெட்டுவாடி பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் கடந்த 1963 ம் ஆண்டு அரசு நில குடியேற்ற கூட்டுறவு சங்கம் அமைத்து பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் பட்லர்களாக இருந்து வந்த 30 குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் வீதம் நிலப்பட்டா வழங்கப்பட்டது.
அதில் வீடுகள் அமைத்தும் விவசாயம் செய்தும் வந்த மக்கள் ஆண்டுகள் கடந்த நிலையில் அப்பகுதியில் 347 குடும்பங்களாக வளர்ந்தது. இந்நிலையில் 2008 ம் ஆண்டு அரசு நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்தை அரசு கலைத்து அந்த பட்டாக்களை ரத்து செய்து அரசு புறம்போக்கு நிலமாக மாற்றி வருவாய்த்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, குடியிருந்து வரும் அனைவருக்கும் நிலப்பட்டா வழங்குவதாக உறுதியளித்தது. அதன்பின் அப்பகுதி மக்கள் தங்கள் குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா கேட்டு பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
அதன்பின் அரசு 80 குடும்பங்களுக்கு 3 செண்ட் வீதம் வீட்டு மனை வழங்கியது. அதனை தொடர்ந்து குடியிருந்து வரும் அனைவருக்கும் நிலப்பட்டா வழங்கக்கோரி மேலும் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதிகாரிகளும் நில அளவை செய்து தங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதியளித்து வந்தனர். ஆனால் பட்டா வழங்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று வெட்டுவாடி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக பதாதைகள் ஏந்தி ஊர்வலமாக எருமாடு பஜார் பகுதிக்கு சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஏசைய்யன் தலைமை வகித்தார். அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டா கொடுக்கவில்லை என்றால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The post எருமாடு வெட்டுவாடி பொது மக்கள் நிலப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
