×

காசநோய் விழிப்புணர்வை அரசால் மட்டும் ஏற்படுத்த முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற உலக காசநோய் தின நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு காசநோய் ஒழிப்பில் செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உலகில் உள்ள காச நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். நமது நாட்டில் 25 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். காசநோயாளிகளில் பெரும்பாலானோர் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

நாம் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் பேரை காச நோயால் இழக்கிறோம். இந்த நோய் குணப்படுத்தக்கூடியது இந்தக் காச நோயை கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. இப்போது 2.5 லட்சம் ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளது. அவையெல்லாம் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வை அரசால் மட்டுமே தனியாக ஏற்படுத்தி விட முடியாது. சமூகத்திற்கு இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது. அரசு சாரா அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டில் நிறைய விசயங்களை சாதித்துள்ளோம். 10 வருடங்களுக்கு முன்பு 60% மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது நிறைய பேர் சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரிசி மற்றும் கோதுமையை விட சிறு தானியத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. விளையாடும் போதும், சத்தான உணவுகளை உண்ணும்போதும் வாழ்க்கை அழகாக இருக்கும். நீங்கள் நோயாளியாக இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்காது.

நீங்கள் நோயாளியாக இருந்தால் நீங்கள் ஏழையாகவே இருப்பீர்கள். இந்த உலகம் 2030ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் நாம் 2025ம் ஆண்டுக்குள் ஒழிப்போம் என்று இலக்கு வைத்திருந்தோம். கண்டிப்பாக நாம் அதைச் செய்ய வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். அதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பேசியதாவது: நான் சினிமாவில் சம்பாதித்ததில் ஒரு பகுதியை பார்த்திபன் மனிதநேய மன்றம் மூலம் சமூக சேவைக்கு செலவு செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் பண்பாட்டை காப்பாற்றுவதற்காக ஆளுநருக்கு நன்றி. நான் என் வாழ்வில் புகைப்பிடித்ததே இல்லை. அதனால் நான் காசநோய் பற்றிப் பேச எனக்கு உரிமை உள்ளது. எனது அப்பா பீடி குடிப்பார், அதன் பெயர் கவர்னர் பீடி, இப்போது அந்தப் பெயரில் பீடி இல்லை. காசநோய் பாதிப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது. காசநோயை விட காசு நோய் குணப்படுத்த முடியாது. காசநோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் இருக்க வேண்டும். ஆளுநர் மீது எனக்கு காதல் மலர்ந்து விட்டது. அவர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நான் துணையாக இருக்க வேண்டும் என்றார்.

 

The post காசநோய் விழிப்புணர்வை அரசால் மட்டும் ஏற்படுத்த முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R.N. Ravi ,Chennai ,Tamil Nadu ,World Tuberculosis Day ,Guindy Governor's Mansion ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...