*இம்மாதம் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.100 கோடி மதிப்பில் 420 படுக்கைகளுடன் கூடிய புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டிடம் இம்மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி, தளி உள்ளிட்ட மலைகிராமங்களிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
உள்நோயாளிகளாக 300க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதில் பெரும்பாலும் அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, பொருளாதரத்தில் பின் தங்கி உள்ள கிராம மக்கள் மற்றும் மலை கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இடம் நெருக்கடியாலும் மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லாததாலும், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் உயர் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்த நிலையில், ஓசூர் – ராயக்கோட்டை சாலையில் காரப்பள்ளி என்னும் இடத்தில், 2.41 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பில், 420 படுக்கைளுடன் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிக்காக கடந்தாண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இப்பணிகள் கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 95 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவுற்று வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருசில தினங்களில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இம்மாத இறுதிக்குள் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: பழைய தலைமை மருத்துவமனையில் போதிய இடம் வசதி இல்லாமல், நோயாளிகளுக்கு உயர்சிகிச்சை அளிக்க முடியாததால், நோயாளிகள் சிகிச்சைக்காக சேலம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெங்களூருவிற்கு சென்றனர். இந்நிலையில் ரூ.100 கோடி மதிப்பில் 6 அடுக்குகளில் 420 படுக்கை வசதிகளுடன், புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாதம் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த புதிய மருத்துவமனையில் அனைத்து விதமான சிறப்பு மருத்துவம் வழங்குவதற்கு தகுதி உடையதாக செயல்படும் விதத்தில், உயர் மருத்துவம் பயின்ற சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றுவார்கள்.
அவசர மருத்துவம், வெளி நோயாளிகள் பிரிவு, கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் ஆய்வகம் துறை, குருதி வங்கி என எல்லா கட்டமைப்புகளும் உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலும், முதியோருக்கு என்று தனியாக ஒரு மருத்துவ பிரிவு அமைக்கப்படும். உடற்குறையுற்றோரின் செயற்பாடுகளுக்கு உதவும் கருவிகள் கொண்ட சிறப்பு பிரிவு, கண் அறுவை சிகிச்சை அரங்கம், சித்தா மருத்துவ பிரிவு மூலிகை தோட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பஸ் நிலையம், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. எனவே புதிய தலைமை மருத்துவமனை பெங்களூருவில் உள்ள உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு இணையாக அமையும். இவ்வாறு கூறினார்.
