×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் களைகட்டியது

*பொதுமக்கள் குவிந்தனர் வியாபாரிகள் மகிழ்ச்சி

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில வாரமாகவே வியாபாரம் சுமாராகவே இருந்தது. ஆனால் நேற்று முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட்டில் காய்கறிகளின் மீண்டும் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கீழப்பாவூர், ஆலங்குளம் ஆழ்வார்குறிச்சி, கடையம், பாப்பாக்குடி, பாப்பாங்குளம், அம்பை பகுதியில் இருந்து கத்தரி, வெண்டைக்காய் சேனை, பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் மற்றும் கிழங்கு வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

மற்ற காய்கறிகளான தக்காளி, அவரை, பல்லாரி, மிளகாய், சிறு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உட்பட காய்கறிகள் ஓசூர், ஓட்டன்சத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கம்பம், தேனி, மதுரை, ஊட்டி, விளாத்திகுளம், திருச்சி, துறையூர் பகுதிகளில் இருந்தும் மகாராஷ்டிரா மாநிலம் புனே, நாசிக்கில் இருந்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

திருமணமான மகள்களுக்கு பொங்கல் படி கொடுப்பதற்கு பெற்றோர்களும், பொங்கல் விற்பனைக்காக மொத்த, சில்லறை வியாபாரிகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க குவிந்தனர்.

மார்க்கெட்டில் காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு கத்தரிக்காய் ரூ.25 முதல் 40க்கும், வெண்டை ரூ.40, புடலை ரூ.30, அவரை ரூ.55, காராமணி ரூ.23, பூசணிக்காய் ரூ.7, தடியங்காய் ரூ.10, சுரைக்காய் ரூ.3, சாம்பார் வெள்ளரி ரூ.11, மிளகாய் ரூ.38, தக்காளி ரூ.25, மாங்காய் ரூ.50 முதல் ரூ.100க்கும், உள்ளி ரூ.50 முதல் 80க்கும், சிறுகிழங்கு முதல்ரகம் ரூ.50க்கும், 2வது ரகம் ரூ.30க்கும், 3வது ரகம் ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை மந்த நிலையில் இருந்த காய்கறி வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இதுவரை இல்லாத அளவிற்கு வாழைத்தார்கள் விற்பனை

ஏரல், குரும்பூர், லால்குடி, திருச்செந்தூர், ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி, பேய்குளம், நாசரேத், காவல்கிணறு உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை கேரளா மொத்த வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்வர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.400க்கு விற்ற நாட்டுத்தார் ரூ.800க்கும், கோழிக்கோடு 300லிருந்து ரூ.600க்கும், ரோபஸ்டா ரூ.100லிருந்து ரூ.600க்கும், கற்பூரவள்ளி ரூ.400லிருந்து ரூ.800க்கும், கதலி ரூ.150லிருந்து ரூ.500க்கும், மட்டி ரூ.250லிருந்து ரூ.600க்கும், செவ்வாழை கிலோ ரூ.80க்கும், ஏத்தங்காய் ரூ..28க்கும், சக்கை கிலோ ரூ.35க்கும், இலை 200 எண்ணம் கொண்ட இலை கட்டுகள் ரூ.800 லிருந்து ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாரி விலை கடும் சரிவு

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு வடமாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லாரி மகசூல் எடுக்காததால் தினசரி 50 டன் முதல் 100 டன் வரை மட்டுமே விற்பனைக்கு வந்தது.

இதனால் பல்லாரி கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 70 வரை விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், நகரி, ஸ்ரீராம்பூர், தங்கம்மன்னமேரி, நாசிக், லாசல்கா, புனே உள்பட பல நகரங்களில் மார்க்கெட்டிற்கு தினசரி 150 டன் முதல் 300 டன் வரை விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை கிடுகிடுவென விலை சரிந்து கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.28 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Pavurchatram ,Pongal festival ,Pavurchatram Kamaraj ,Keelappavur ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...