×

108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து

* சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் திரும்பி செல்லும் அவலம்

* உயர்மட்ட பாலம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

களக்காடு : திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில், நம்பியாற்றின் குறுக்கே பழுதடைந்து காணப்படும் பாலத்தை அகற்றி விட்டு, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோயில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இப்பகுதி பக்தர்களால் ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயிலுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளிலும், தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

திருக்குறுங்குடியில் இருந்து இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் சப்பாத்து பகுதியில் நம்பியாறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து தான் வனத்துறை சோதனைச்சாவடி வழியாக வனப்பகுதிக்கு சென்று திருமலைநம்பி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.

இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சப்பாத்து நம்பியாற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் பாலம் பழுதடைந்து காணப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவரோ, பாதுகாப்பு தடுப்புகளோ இல்லை.

தண்ணீர் செல்லும் குழாய்களும் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது பாலம் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. பாலம் நீரில் மூழ்கி விடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதையடுத்து திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதுபோல மலையடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கும், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கும் செல்ல முடியாமல் வனத்துறையினரும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பெய்த மழையினால் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது திருமலைநம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பாலத்தை கடந்து வர முடியாமல் தவித்தனர்.

அவர்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று கயிறு கட்டி மீட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போதும் மழைக்காலங்களில் நம்பியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது, பாலம் மூழ்கி விடும் என்பதால், பக்தர்கள் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் விஷேச நாட்களில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

அத்துடன் புரட்டாசி சனிக்கிழமை போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வரும் போது, பாலத்தில் வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டு, போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சப்பாத்து நம்பியாற்றில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு, புதியதாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் பாராமுகம்

திருக்குறுங்குடியை சேர்ந்த திராவிடர் வெற்றி கழக மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், ‘சப்பாத்து நம்பியாற்றின் மீது பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

மழை நேரங்களில் திடீர் என ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பாலம் மூழ்கி விடுவதால் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.

இதுபற்றி பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்து வருகிறோம். எனினும் அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். இனிமேலாவது அங்கு உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Tags : Nambi River ,Thirumalainambi Temple ,Lord ,Kalakkadu ,Thirukurungudi ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...