×

கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : பனை, தென்னையை பாதுகாக்க வலியுறுத்தியும், கள் இறக்க அனுமதி அளிக்கக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார்.

இதில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை வன விலங்குகளிடம் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நல்லசாமி கூறியதாவது: கள் என்பது தாய்ப்பாலுக்கு நிகரானது. கள், பதநீர் ஆகியவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி பாட்டில்களில் அடைத்து உள்நாட்டிலும், உலகளவிலும் சந்தைப்படுத்தும்போது தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும். கடந்த 2011ம் ஆண்டு கலைக்கப்பட்ட தென்னை விவசாயிகள் நல வாரியத்தை புதுப்பிக்க வேண்டும்.

கள்ளை ஆதரிக்கும் கட்சிகள், கள் இறக்கி சந்தைப்படுத்தும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். கள்ளை எதிர்ப்பவர்கள் அது போதைப்பொருள் என நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். தென்னையை தாக்கும் ‘ரூகோஸ்’ சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி மரங்களை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கள் இறக்க அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore South ,Taluk ,Tamil Nadu ,Plantation ,Movement ,Coordinator ,Nallaswamy ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...