காஞ்சிபுரம்: அங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், டம்பளர்கள் ஆகியவற்றை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், தமிழக அரசு சார்பில் மீண்டும் ‘‘மஞ்சள் பை’’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடைகளுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து பைகளை கொண்டு செல்ல வேண்டும், என்றும் அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மஞ்சள் பைகளை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் அங்கம்பாக்கத்தில் நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பிளாஸ்டிக் பைகள் தவிர்த்தல் குறித்தும் துணிப் பைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அன்றாட பயன்பாட்டிற்கு துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும், என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 50 பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை மாணவர்கள் வழங்கினர். அப்போது, கடைகளுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து துணிப் பைகளை எடுத்துச்செல்வோம், கடைகளில் பிளாஸ்டிக் பைகளை அவசியமின்றி கேட்டு வாங்க மாட்டோம், என்றும் பொதுமக்கள் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் அறிவியல் ஆசிரியர் சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: மாணவர்கள் மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் appeared first on Dinakaran.
