சென்னை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் வரும் 16ம்தேதி திருப்போரூரில் “சாதி வாரிக் கணக்கெடுப்பும், பஞ்சமர் நில மீட்பும்’’ என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த, பேரணியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நிர்வாகிகள்கலந்து கொள்வதாகவும், திருப்போரூர் இள்ளலூர் சந்திப்பில் இருந்து பேரணியாக புறப்பட்டு ரவுண்டானா வரை செல்வதாகவும், பின்னர் அப்பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாகவும் அதற்கு அனுமதி வேண்டி திருப்போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர். இந்த, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உத்தரவிட்டார்.
அதன்பேரில், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் தற்போது பிரம்மோற்சவ விழா நடந்து வருவதாலும், திருப்போரூர் நகரப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் முகூர்த்த நாட்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஏராளமானோர் வருகை தருவதாலும், அந்த நேரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமும் ஏற்படும். அதுமட்டுமின்றி, பேரணியில் எத்தனை ஆண்கள், பெண்கள் கலந்து கொள்வார்கள், எத்தனை மணி நேரம் நடைபெறும் என்ற தகவல்கள் எதுவும் இல்லாததால், சீமான் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
The post திருப்போரூரில் 16ம் தேதி நடைபெறவுள்ள சீமான் கட்சியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.
