திருவண்ணாமலை: மாசி மாத பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மலையை கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 11.35 மணிக்கு தொடங்கி, நாளை பிற்பகல் 12.23 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கும் முன்பே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பவுர்ணமி 11.35 மணிக்கு தொடங்கினாலும், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். மதியத்திற்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பவுர்ணமியொட்டி இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மாசி மகம் தீர்த்தவாரியை தொடந்து இன்று மாலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு மகுடாபிஷேகம் நடைபெற உள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகருக்குள் சுற்றுலா கார், வேன் மற்றும் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. மேலும், வேலூர் கன்டோன்மென்ட் வழியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரையும், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.
