திருவெறும்பூர்: திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அலுவலக அறைக்குள் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பாய்லர் எக்கு குழாய் தயாரிப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக நாகர்கோவிலை சேர்ந்த சண்முகம் (50) வேலை செய்து வந்தார். திருச்சி பெல் கணேசபுரம் 8வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி பார்வதி. பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
இவர்களது ஒரே மகள் வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்லையில் பி.டெக் படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் சண்முகம் பணிக்கு சென்றார். மாலை 4.30 மணிக்கு பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது அறை கதவு சாத்தப்பட்டுள்ளது், வீட்டுக்கு சென்றிருக்கலாம் என அலுவலர்கள் கூறியுள்ளனர். நேற்று அதிகாலை 1 மணி வரை அவர் வீட்டுக்கு வராததால், மனைவி மீண்டும் அலுவலகத்துக்கு போன் செய்தபோது, அலுவலர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அறை கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள், அதிகாலை 1.30 மணியளவில் அவரது அலுவலக அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு ஷோபாவில் அமர்ந்திருந்தபடி நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் அமர்ந்த நிலையிலேயே சண்முகம் இறந்து கிடந்தார். அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெல் அலுவலகத்தில் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: திருச்சியில் அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.
