×

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

*திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

திருப்பத்தூர் : 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இன்பகுமார்(29). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆம்பூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, ஆட்டோவில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலைியல் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை கூறினார். தொடர்ந்து இன்பகுமாரிடம் பெற்றோர் கேட்டபோது, திருமணத்துக்கு மறுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், இன்பகுமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இன்பகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார்.

அதில் அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சரவணன் ஆஜரானார்.இதையடுத்து இன்பகுமாரை ஆம்பூர் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupattur court ,Inpakumar ,Panangattur ,Ambur ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது