காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய கட்டிடத்தில் இருக்கும் டாக்டர்கள் ஓய்வு அறையில், கடந்த டிச. 31ம் தேதி இரவு வெளிநாட்டு மதுபாட்டில், சிக்கன், மட்டன் உணவு வகைகளுடன் மது அருந்தி விட்டு அப்படியே அனைத்தையும் விட்டு சென்றுள்ளது போல பெட் முழுவதும் பரப்பி கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தன்று பணியில் இருந்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘எனக்கு குடிப்பழக்கம் இல்லை. வெளிநபர்கள் யாராவது வந்து டாக்டர்கள் ஓய்வு அறையில் மது அருந்தி இருக்கலாம். இங்குள்ள மருத்துவமனையில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை’’ என்றார். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் மீனாட்சி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
